

தனுஷை சந்தித்து, உடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி என்று மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
பின்பு ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. இந்த முதற்கட்டப் படப்பிடிப்பு நேற்றுடன் (பிப்ரவரி 7) முடிவுற்றது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு மே மாதம் தான் தொடங்கவுள்ளது.
தனுஷ் நடித்தது, முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவு ஆகியவை குறித்து மாளவிகா மோகனன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"உங்களைச் சந்தித்தது, உங்களுடன் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் உங்களிடமிருந்து கற்றது, மேகியின் மீது நமக்கிருந்த பரஸ்பர அன்பு, மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளும் உங்கள் சிரிப்பு ஆகியவை இல்லாத குறையை உணர்வேன்.
முதல் கட்ட படப்பிடிப்பு மிக உற்சாகமாக இருந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கப்படும் என்று காத்திருக்கிறேன். இந்த அற்புதமான அணியோடு பணியாற்றியது அற்புதமாகவே இருந்தது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன்"
இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.