

பிரச்சினைகள் அனைத்தும் பேசி தீர்க்கப்பட்டதால், 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை க்ளோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் நீண்ட வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்குச் சென்று 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் மீது பைனான்ஸ் சிக்கல்கள் இருந்ததால், நீண்ட நாட்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
கரோனா ஊரடங்கு சமயத்தில் ஓடிடி வெளியீட்டுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், திட்டமிட்டபடி முடிவடையாத காரணத்தால் ஓடிடி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது. இறுதியாக, சில தினங்களுக்கு முன்பு திரையரங்க வெளியீட்டுக்காகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது படக்குழு. இதில் பைனான்ஸ் சிக்கல்கள் தீர்ப்பதற்குப் பேசப்பட்டன.
இறுதியாக, அனைத்துப் பிரச்சினைகளும் பேசித் தீர்க்கப்பட்டுப் படத்தின் வெளியீட்டு உரிமையை ராக்போர்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மார்ச் 5-ம் தேதி திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் செல்வராகவன் படத்தின் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தப் படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீஸர், ட்ரெய்லர் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தற்போது தனுஷ் நடிக்கவுள்ள 'நானே வருவேன்' படத்தின் முதற்கட்டப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் செல்வராகவன்.