Published : 07 Feb 2021 12:28 pm

Updated : 07 Feb 2021 12:29 pm

 

Published : 07 Feb 2021 12:28 PM
Last Updated : 07 Feb 2021 12:29 PM

புன்னகையே உண்மையான மருந்து: சக தாய்மார்களுக்கு நிஷா கணேஷின் விழிப்புணர்வுப் பதிவு

nisha-ganesh-awareness-post-to-moms

நடிகையும், தொகுப்பாளினியுமான நிஷா கணேஷ், சக தாய்மார்களுக்கென விழிப்புணர்வுப் பதிவொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துப் பின் தொடர்கள், திரைப்படங்கள் என்று நடித்துப் பிரபலமானவர் நிஷா. 2015ஆம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கட்ராமைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு சமைரா என்கிற பெண் குழந்தைப் பிறந்தது.


அண்மையில் தனது குழந்தை சமைராவுக்கு ஏற்பட்ட உடல் உபாதை குறித்தும், அதன் மூலம் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்தும் நிஷா கணேஷ் தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

"ஒரு பயங்கரமான சூழல் வந்தது. சிறுநீர் பாதையில் கடுமையான தொற்று ஏற்பட்டதால் மகள் சமைரா (2 வயது) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். தற்போது அவள் பரிபூரணமாக குணமடைந்து விட்டாள். 13 நாட்கள் கழித்து வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம்.
நான் யதார்த்தமானவள் தான். ஆனால் இப்படி ஒரு சூழலுக்கு நான் தயாராக இல்லை.

நமது குழந்தை என்று வரும்போது அது நம்மை உலுக்கிவிடும். அந்தச் சூழலைக் கையாள நீங்கள் பாறை போல உறுதியாக இருக்க வேண்டும். மருத்துவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் அளவுக்குத் தெளிவாக இருக்க வேண்டும். இதுவரை குழந்தைக்குக் கொடுத்த மருந்துகள் குறித்த விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

இதை நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அவசர காலத்துக்காக நான் சேகரித்து வைத்திருந்த தகவல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. இந்த கடினமான சூழலில் நான் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மற்ற அத்தனை அம்மாக்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

1. உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து உங்கள் உள்ளுணர்வு சொல்லுவதை நம்புங்கள்.

2. குடும்ப காப்பீடு திட்டத்தில் உங்கள் குழந்தையின் பெயரைச் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

3. உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்கே என்றும் முக்கியத்துவம் கொடுங்கள்.

4. உங்கள் குழந்தையின் உடலநலன் சம்பந்தமான மருத்துவ ஆவணங்களின் டிஜிட்டல் பிரதியை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

5. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் எவ்வளவு கேள்விகள் முடியுமோ அவ்வளவையும் கேளுங்கள், தயக்கம் வேண்டாம். அது எவ்வளவு முறை கேட்கக் வேண்டியிருந்தாலும் சரி.

6. தாய்ப்பால் ஒரு வரம். அது குழந்தைக்கு அமைதியையும், ஊட்டச்சத்தையும் தருகிறது. என் மகளுக்கு 1.7 வயது. என்னால் முடியும் வரை அவளுக்குத் தாய்ப்பால் கொடுப்பேன். இது குறித்து எதிர்மறையாகப் பேசுபவர்களைப் புறக்கணியுங்கள்.

7. என்றும் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை, மருத்துவர்களின் தொலைபேசி எண்கள், முகவரிகள், செல்லும் வழி எப்படி உள்ளிட்ட விவரங்களைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

8. உங்கள் குழந்தைக்கென ஒரு புத்தகத்தைப் பேணுங்கள். இதுவரை உங்கள் குழந்தையின் உடல் உபாதைக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள் பற்றிய பட்டியல் அதில் இருக்கட்டும். என்றுமே மருந்துகளை எங்கும் எடுத்துச் செல்ல எளிதாக இருக்கும் ஒரு பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். பயணங்களிலும் உங்களுக்கு எளிதாக இருக்கும்.

9. உங்கள் குழந்தை பொழுதுபோக்க அவர்களுக்குப் பிடித்தமான புத்தகங்கள், பொம்மைகள், இசை ஆகியவற்றை தயாராக வைத்திருங்கள். அவர்கள் தினமும் சாப்பிடும் உணவு பற்றிய பட்டியலை வைத்திருங்கள். அதை மருத்துவமனை குழுவிடமோ, நண்பரிடமோ அல்லது குடும்பத்தில் இருபவர்களிடமோ கொடுத்து குழந்தைக்கு சரியான நேரத்தில் உணவிடச் சொல்லலாம்.

10. வீட்டில் குழந்தைகளின் பொருட்களை எளிதாக அடையாளம் காண அவற்றின் மீது பெயர் எழுதி வையுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் அவற்றைக் கொண்டு வர இது உங்கள் நண்பர்களுக்கு / குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும்.

கடைசியாக

11. கண்டிப்பாக சோர்வைத் தருவதாக, உங்களால் கையாள முடியாத ஒன்றாக சூழ்நிலை மாறும்போது வெடித்து அழுவதில் தவறில்லை. ஆனால் முடிவில் உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்ளத் தேவையான சக்தி உங்களுக்கு வேண்டும். என்றும் முகத்தில் புன்னகையை மறக்காதீர்கள். அதுதான் நம் குழந்தைகளை உண்மையாகக் குணப்படுத்தும்.

இது எவருக்காவது ஏதாவது ஒரு வகையில் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுவும் கடந்து போகும்.

சமைராவின் வலிமையான அம்மா நிஷா கணேஷ்"

என்று நிஷா பகிர்ந்துள்ளார்.

தவறவிடாதீர்!


Nisha ganesh instagramNisha krishnan instagramNisha ganesh venkatramNisha samairaGanesh venkatram daughterUti problemUrinary tract infectionInstagram awarenessAwareness postCelebrity postநிஷா கணேஷ் பதிவுவிழிப்புணர்வுப் பதிவுஇன்ஸ்டாகிராம் பதிவுகணேஷ் வெங்கட்ராம் மனைவிநிஷா சமைராகுழந்தை வளர்ப்புகுழந்தைகள் ஆரோக்கியம்குழந்தைகள் உடல் நலன்குழந்தைகள் வளர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x