

விஜய்க்கு தகுந்த கதையை தேடி, தயார் செய்த பின் அவரை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி பேசியுள்ளார்.
பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட விஜய்யின் பல வெற்றிப் படங்கள் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த திரைப்படங்களே.
கடைசியாக ஜில்லா திரைப்படத்தை விஜய் மற்றும் மோகன்லால் நடிக்கத் தயாரித்திருந்தார். விஜய் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிப் படங்கள் சௌத்ரியின் தயாரிப்பில் உருவானவை என்பதால் விஜய் மனதில் என்றுமே சூப்பர் குட் ஃபிலிம்ஸுக்கு விசேஷ இடம் ஒன்று உள்ளது.
தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 90வது தயாரிப்பாக களத்தில் சந்திப்போம் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் விசேஷத் திரையிடல் ஒன்று சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் திரையிடல் முடிந்த பிறகு ஆர்.பி.சௌத்ரி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது விஜய்யை வைத்து மீண்டும் திரைப்படம் தயாரிப்பீர்களா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, "விஜய்க்கு தகுந்தாற் போல ஒரு கதையைத் தயார் செய்ய வேண்டும்.
அவர் எங்கள் தயாரிப்பில் 6 படங்களில் நடித்திருக்கிறார். எனவே 7வது முறையாக அவர் கண்டிப்பாக நடிப்பார்.
ஆனால் கதைக்காக அவரை நடிக்க வைத்தோம். இன்று அப்படி கிடையாது. அவரது ரசிகர்களுக்குப் பிடித்தாற் போல அவருக்காக ஒரு கதையைத் தேடி தயார் செய்து அதில் அவரை நடிக்க வைக்க வேண்டும்" என்று சௌத்ரி பதிலளித்துள்ளார்.