

'பவுடர்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் முன்னணி பி.ஆர்.ஓ நிகில் முருகன்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பி.ஆர்.ஓ ஆகப் பணிபுரிந்து வருபவர் நிகில் முருகன். சில நடிகர்களுக்கு மேலாளராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது 'ராதே ஷ்யாம்', 'கே.ஜி.எஃப் 2', 'ஆதி புருஷ்' உள்ளிட்ட பல படங்களுக்கு பி.ஆர்.ஓ ஆகப் பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய நடை, பேச்சு ஆகியவற்றை வைத்து நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் ஸ்ரீ. 'பவுடர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் நிகில் முருகன். இந்தப் படத்தின் டீஸரை தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் இணைந்து வெளியிட்டார்கள்.
இதில் வித்யா ப்ரதீப், 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, வையாபுரி, ஆதவன் உள்ளிட்ட பலர் நிகில் முருகனுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸருக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். முழுக்க சென்னையைச் சுற்றி இரவிலேயே இந்தப் படத்தைப் படமாக்கியுள்ளது படக்குழு. மார்ச் மாதம் இந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
'பவுடர்' படத்துக்கு முன்னதாக 'ஜே ஜே' மற்றும் 'சிவாஜி' உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நிகில் முருகன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.