

'நான் ரீமேக் படங்களுக்கு எதிரானவள்' என்று மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படம் இன்று (பிப்ரவரி 5) வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த மஞ்சிமா மோகன் பேட்டியளித்துள்ளார்.
அதில் "மலையாள படங்கள் பல மொழிகளில் ரீமேக் பண்ணுகிறார்கள். ஆனால் அவை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறுவதில்லையே" என்ற கேள்விக்கு மஞ்சிமா மோகன் கூறியிருப்பதாவது:
"சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும். நானும் 'குயின்' ரீமேக்கில் நடித்துள்ளேன். ரீமேக் படங்களுக்கு எதிரானவள் நான். படங்களுக்கு மொழி, களம் என அனைத்துமே கச்சிதமாக இருக்க வேண்டும். மலையாளப் படம் மலையாளத்தில், தமிழ் படம் தமிழில், தெலுங்கு படம் தெலுங்கில் தான் பார்க்க வேண்டும். வெற்றியடையும் படங்களை ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ஏன் ரீமேக் செய்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியவில்லை"
இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.