

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நடிகர்கள் அனைவரும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். இதற்காக அனைத்து நடிகர்களிடமிருந்து மொத்தமாகத் தேதிகள் வாங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இதுவரை சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பைத் தொடர முடிவு செய்துள்ளது படக்குழு.
இதுவரை 70% படப்பிடிப்பு முடிவுற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விக்ரமும் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் பங்கெடுத்து நடிக்கவுள்ளார். இதில் பல்வேறு நடனக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட பாடலொன்றைப் படமாக்கத் திட்டமிட்டு வருகிறார் மணிரத்னம்.
கிராபிக்ஸ் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் தான் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.