

வசூல் நிலவரங்கள் குறித்து நடிகர்களிடம் கேள்வி கேட்காதீர்கள் என்று ஜீவா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
என்.ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்த இந்தப் படம் இன்று (பிப்ரவரி 5) வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜீவா பேட்டியளித்துள்ளார். அதில், "வசூல் நிலவரங்களை வைத்து யார் பெரிய நாயகன், யார் படம் ஹிட்டாகிறது என்று பேசத் தொடங்கியுள்ளனர். வசூலில் ஒரு வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. அது எப்போது சாத்தியமாகும் என நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வி ஜீவாவிடம் எழுப்பப்பட்டது.
"அதற்கு இன்னும் காலமாகும் என நினைக்கிறேன். அதில் இருக்கும் சில விஷயங்கள் எங்களுக்கே புரிவதில்லை. இன்னொரு விஷயம், அதுவொரு திரைப்பட வியாபாரம். உங்களுக்குப் படம் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதுதான் முக்கியம். திரைப்பட வியாபாரம் என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் சம்பந்தப்பட்டது. படங்கள் பெரிய அளவில் வசூல் ஆவதற்கா மட்டுமா படம் பண்ணுகிறோம்.
வசூல் நிலவரங்கள் குறித்து நடிகர்களிடம் கேள்வி கேட்காதீர்கள். 'கோ' திரைப்படம் 100 கோடி வசூல் செய்தது என்றால், 'சிவா மனசுல சக்தி' திரைப்படம் 100 கோடி வசூல் செய்திருக்காது. அதற்காக 'கோ' சிறந்த படம் என்றும், 'சிவா மனசுல சக்தி' சிறந்த படமல்ல என்றும் சொல்ல முடியாது. படங்களின் வசூலில் வரும் பங்குத்தொகை எல்லாம் ரசிகர்களுக்குப் போய்ச் சேரப் போவதில்லை. ஒரு வேளை அந்தப் பங்குத்தொகை கிடைக்கிறது என்றால் அதைப் பற்றிப் பேசலாம், தவறில்லை.
யாரோ ஒருவர் சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, நாம் ஏன் அதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி. 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்கிறோம், அதற்குப் படம் தகுதியானதா இல்லையா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். ரஜினி சார், விஜய் சார், அஜித் சார் ஆகியோருடைய படங்களில் எது பெரிய வசூல், யார் பெரிய ஸ்டார் என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம்.
முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். படம்தான் அந்த மேஜிக்கை நிகழ்த்தும். நான் நடித்த படங்களால் எனக்குப் பெருமைதான். 5 ஆண்டுகள் கழித்துக் கூட 'ஜிப்ஸி' படத்தைப் பார்ப்பேன். அய்யோ போடாதீங்கடா. செம போர்டா என்றெல்லாம் சொல்லமாட்டேன். அதில் நடித்த அனுபவத்தைப் பற்றி அப்போதும் பேசுவேன். வசூல் நிலவரங்களை விட படத்தின் அனுபவம்தான் முக்கியம். அந்த அனுபவம் வசூலாக மாறியது என்றால் சந்தோஷம்தான்".
இவ்வாறு ஜீவா தெரிவித்துள்ளார்.