எனக்கு எந்தவித வருத்தங்களும் இல்லை; நான் அப்படித்தான்: கெளதம் மேனன்

எனக்கு எந்தவித வருத்தங்களும் இல்லை; நான் அப்படித்தான்: கெளதம் மேனன்
Updated on
1 min read

எனக்கு எந்தவித வருத்தங்களும் இல்லை. நான் அப்படித்தான் என்று கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் கெளதம் மேனன். தற்போது வருண் நடிப்பில் உருவாகி வரும் 'ஜோஷ்வா' படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

2001-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கெளதம் மேனன் இயக்கத்தில் 'மின்னலே' படம் வெளியானது. ஆகையால், இந்த ஆண்டுடன் திரையுலகில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ளார் கௌதம் மேனன். இதனை முன்னிட்டு நீண்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:

கெளதம் மேனன் நாயகர்கள் அவரைப் போலவே இருப்பது குறித்து?

என் மனைவி இதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். நான்தான் பிரச்சினை என்று. ஏனென்றால் நான் சிலருடன் பணியாற்றுகிறேன். முழு அர்ப்பணிப்புடன் அவர்களோடு வேலை செய்கிறேன். எனது சுயத்தை அதீதமாகக் காட்டுகிறேன். அவர்களைத் தாண்டி நான் வந்த பிறகு அது அவர்களால் பொறுக்க முடிவதில்லை. என் மீது கோபம் கொள்கின்றனர். இதை என் மனைவி என்னிடம் சொன்னார். இது உண்மையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், என் சுயத்தைப் பற்றி நான் என் படங்களில் அதிகம் காட்டி விடுகிறேனா என்று நான் பல முறை சிந்தித்ததுண்டு.

விமானங்களில் செல்லும்போது எனது முன்னாள் காதலியையோ, வேறு யாராவது விசேஷமானவரையோ நான் பார்க்கப் போகிறேனா என்று விளையாட்டாகக் கேட்டவர்கள் உண்டு. எனது படங்களில் என் தனிப்பட்ட விஷயங்களின் ஒரு பிணைப்பு இருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. அவை என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக நான் நினைக்கிறேன்.

கெளதம் மேனன் பாணி என்ற ஒன்று இந்த 20 வருடங்களில் உருவாகிவிட்டது என்றாலும் அதிகமாகப் படங்கள் இயக்கவில்லை, கடைசி பெரிய வெற்றி 2015-ம் ஆண்டின் 'என்னை அறிந்தால்'தான். இது குறித்து?

முதலில் எனக்கு எந்தவித வருத்தங்களும் இல்லை. நான் அப்படித்தான். இந்தத் துறை இப்படித்தான் இயங்கும் என்பதை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். துணிந்து ஒன்றைச் செய்கிறோம். அது உங்களை ஒன்று பத்து படி முன்னால் கொண்டு செல்லும் அல்லது பின்னால் தள்ளும். இந்தத் துறையில் ஒரு சிலரைத்தான் நான் ஆதர்சமாக நினைக்கிறேன். அவர்கள் தொழில் வாழ்க்கையும் மோசமான கட்டங்களில் இருந்துள்ளது.

இவ்வாறு கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in