'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் லீக்- பொய்யைப் பரப்பிய ரசிகர்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி

'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் லீக்- பொய்யைப் பரப்பிய ரசிகர்கள்: படக்குழுவினர் அதிர்ச்சி
Updated on
1 min read

'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் லீக்கானது என்று ரசிகர்கள் பொய்யாக ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்தது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வலிமை'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிகிறார்கள் என்பதைத் தவிர வேறு எந்தவொரு தகவலையும் படக்குழு தெரிவிக்கவில்லை. அஜித்துடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதனால் அவ்வப்போது 'வலிமை' அப்டேட் வேண்டும் என்று ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். ஆனால், படக்குழுவினர் எதுவுமே தெரிவிக்காத விரக்தியில் தயாரிப்பாளர் போனி கபூர் எந்தவொரு ட்வீட் செய்தாலும், அதற்குப் பதிலாக "வலிமை அப்டேட்" என்று கேட்கத் தொடங்கினார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லை மீறி, பிரபலங்கள் சிலருடைய ட்விட்டர் பக்கத்திலும் போய் "வலிமை அப்டேட்" என்று பதிவிடத் தொடங்கினார்கள். உதாரணமாக, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மும்பையில் இருப்பதாகப் புகைப்படத்துடன் ட்வீட் செய்தார். அதற்கு "மும்பையில்தான் போனி கபூர் வீடு இருக்கிறது. அவரிடம் சென்று வலிமை அப்டேட் கேட்டுச் சொல்லுங்கள்" என்று பதில் அளித்தார்கள்.

வாரம் ஒரு முறை இப்படிச் செய்து கொண்டிருந்தனர். ஆனால், படக்குழுவினரோ எதற்கும் அசரவில்லை. இதனால், நேற்று (பிப்ரவரி 3) இரவு #ValimaiFlLeaked என்று ட்ரெண்ட் செய்யத் தொடங்கினார்கள். படக்குழுவினரோ ஃபர்ஸ்ட் லுக் லீக்காகி விட்டதா என்று அதிர்ச்சி அடைந்தார்கள். லீக்காகி விட்டது என்ற தகவல் வெளியானால், படக்குழுவினரோ அதிகாரபூர்வமாக வெளியிட்டுவிடுவது வாடிக்கை. ஆகையால் இப்படியொரு முடிவை எடுத்து ட்ரெண்ட் செய்தார்கள். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானதுதான் வேடிக்கையாக இருந்தது.

ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை குறித்து 'வலிமை' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "முதலில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். பின்புதான் மற்றவை அனைத்துமே" என்று முடித்துக் கொண்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in