சிம்பு புத்திக்கூர்மை மிக்கவர்: கல்யாணி ப்ரியதர்ஷன்

சிம்பு புத்திக்கூர்மை மிக்கவர்: கல்யாணி ப்ரியதர்ஷன்
Updated on
1 min read

சிம்பு புத்திக்கூர்மை மிக்கவர் என்று கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படம் தொடர்பாக நாயகி கல்யாணி ப்ரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

" 'மாநாடு' படத்தில் நடித்த ஒட்டுமொத்த அனுபவமும் இடைவிடாத சந்தோஷமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும் என்பதில் உற்சாகமாக எழுந்திருப்பேன். சிம்பு புத்திக்கூர்மை மிக்கவர். ஒவ்வொரு காட்சியிலும் புதிதாக ஏதாவது சேர்த்துக்கொண்டே இருப்பார். நம் வசனங்களை வெறுமனே மனப்பாடம் செய்துவிட்டுப் போய் பேச முடியாது.

ஒவ்வொரு டேக்கிலும் தன்னிச்சையாகப் புதிய விஷயங்களைச் செய்து அவரது நடிப்பில் மாற்றம் காட்டுவார். ஒரு நடிகராக அவர் செய்யும் விஷயங்கள், சக நடிகராக நம்மை அந்தக் காட்சியில் அதிக கவனத்தோடு இருக்கச் செய்யும். அவரது நடிப்புக்கு பதிலளிக்கும் விதமாக நடிக்கத் தயாராக இருக்க வேண்டும். மிகவும் உயிர்ப்பான, உற்சாகமான முறை இது.

இதில் இன்னொரு உற்சாகம் என்னவென்றால் வெங்கட் பிரபுவும் இதேபோலத்தான் படப்பிடிப்பு நடத்துவார். என்றுமே அமைதியாக இருப்பார். நடக்கும் எந்த மாயமுமே முன்னால் திட்டமிட்டது கிடையாது. அந்த மாயம் காட்சியைப் படம்பிடிக்கும்போதுதான் நடக்கும். அதற்கு முழு சுதந்திரம் தந்துவிடுவார். ஒட்டுமொத்தக் குழுவும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதால் எல்லாம் சரியாக வேலை செய்யும். மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன்".

இவ்வாறு கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in