சில நேரங்களில் என் படங்களை நானே பார்க்கமாட்டேன்: சூர்யா 

சில நேரங்களில் என் படங்களை நானே பார்க்கமாட்டேன்: சூர்யா 
Updated on
1 min read

சில நேரங்களில் நான் நடித்த படங்களைப் பார்ப்பதில்லை என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியிருக்கும் நடிகர் சூர்யா, 20 வருடங்களுக்கு மேல் தான் திரைத்துறையில் இருந்தாலும் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், மீண்டும் தனது படங்களைப் பார்ப்பது அவ்வளவு எளிதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"சில நேரங்களில் நான் நடித்த படங்களைப் பார்க்காமல் விலகிவிடுவேன். படம் வெளியாகி 100 நாட்கள் காத்திருந்து பார்த்ததெல்லாம் கூட நடந்திருக்கிறது. சில சமயம் குறிப்பிட்ட சில காட்சிகளை மட்டும் பார்க்கமாட்டேன்.

ஆனால், மக்கள் படத்தை ரசிக்கும்போது, எனது தவறை மன்னித்துப் பெரிய மனதோடு படத்தை ரசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பேன். அதன் பிறகுதான் அது எனக்குப் பிடித்தமான படம். அதில் தவறுகளைப் பார்க்கவில்லை என்று கூறுவேன். எனது மனைவியும், சகோதரரும் கூட நடிகர்கள்தான். ஆனால், அவர்கள் என்னைப் போல கிடையாது. அவர்கள் செய்யும் வேலையில் தன்னம்பிக்கை மிக்கவர்கள். அவர்கள் நடிப்பு அவர்களுக்குப் பிடிக்கும்.

நான் எனது நடிப்பைக் கடுமையாக விமர்சனம் செய்வதுண்டு. எனது சிறந்த உழைப்பைத் தரவில்லை. இன்னும் கூட கடுமையாக முயல வேண்டும் என்று சொல்லிக்கொள்வேன். என் மீது நான் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன். நான் இப்படித்தான். 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் கூட சிறப்பாக நடித்திருக்கலாமே என்றுதான் நான் இன்றும் நினைக்கிறேன்" என்று சூர்யா பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in