

'அயலான்' படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை முன்னிட்டு, கிராபிக்ஸ் பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
24 ஏ.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அயலான்'. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்கள் தொடங்கப்படாமல் இருந்த இந்தப் படத்தின் பிரச்சினையை முடித்துவைத்தது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். இதனைத் தொடர்ந்து மீதமுள்ள தயாரிப்பையும் அந்நிறுவனமே மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. அதில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்க சென்னையில் தொடங்கப்பட்டது. இதில் படமாக்க வேண்டிய காட்சிகளை முடித்து, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இயக்குநர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பதிவில், "படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவிற்கு அன்பு முத்தங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு.
படம் முழுக்கவே கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்துள்ளதால், அதன் பணிகளை முடிக்கப் படக்குழு மும்முரமாகியுள்ளது. அனைத்துப் பணிகளையும் முடித்து கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. 'அயலான்' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.