

2020-ம் ஆண்டிற்கான பிக் பாஸ் போட்டி கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கியது. இதில் ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம், கேப்ரில்லா, அர்ச்சனா, சுசித்ரா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜீத் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள்.
இதில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மொத்தம் பதிவான 30 கோடி ஓட்டுகளில், ஆரிக்கு 16 கோடிக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. பாலாஜி இரண்டாம் இடத்தையும், ரியோ மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு ஆரி அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:
பிக் பாஸ் அனுபவத்திலிருந்து உங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய பாடம் என்ன?
என் பலம் என்ன என்பதை இது சொல்லித் தந்தது. சுய ஒழுக்கத்தின், உழைப்பில் சமத்துவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லித் தந்தது.
அடுத்து என்னென்ன திரைப்படங்கள்?
எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான், தமிழின் முதல் ஏலியன் திரைப்படம் என்று அதை நான் சொல்வேன். அடுத்து அலேகா, பகவான் ஆகிய படங்களும் உள்ளன. சில கதைகளைக் கேட்டு வருகிறேன்.
ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள், எதிர்காலத்தில் அரசியலில் இறங்குவீர்களா?
அத்தனை குடிமக்களையும் போல நானும் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன். இன்று ஓட்டுப் போடும் அரசியலில் இருக்கிறேன். ஒரு வேளை ஓட்டுக் கேட்கும் அரசியலுக்குச் செல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இருப்பதாக நான் நினைத்தால், பார்க்கலாம்.