

டிஆர்பி ரேட்டிங்கில் பல்வேறு படங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது 'புலிக்குத்தி பாண்டி'. இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான படம் 'புலிக்குத்தி பாண்டி'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. பொங்கல் விடுமுறையைக் கணக்கில் கொண்டு ஜனவரி 15-ம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் மட்டுமே, அதற்கு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது.
ஒரு வாரம் கழித்து BARC நிறுவனம் வெளியிடும் டிஆர்பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. எவ்வளவு பேர் வீட்டில் அந்தத் தருணத்தில் சன் டிவி பார்க்கப்பட்டது என்பதை வைத்து டி.ஆர்.பி ரேட்டிங் கணக்கிடுவார்கள். அந்த வரிசையில் டி.ஆர்.பியில் 1,32,84,000 புள்ளிகளைப் பெற்று 'புலிக்குத்தி பாண்டி' படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜனவரி 14-ம் தேதி சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படத்தை இதே சன் டிவிதான் ஒளிபரப்பியது. அந்தப் படத்துக்கு டி.ஆர்.பியில் 1,09,88,000 புள்ளிகளே கிடைத்துள்ளன. மேலும், 'தர்பார்' உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை விட 'புலிக்குத்தி பாண்டி' டி.ஆர்.பி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது முத்தையா இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.