

'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்துக்கு முன்பாக 'புதுப்பேட்டை 2' படத்தை இயக்க செல்வராகவன் முடிவு செய்துள்ளார்.
'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
'நானே வருவேன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும் எனத் தெரிகிறது.
இந்தப் படம் தொடர்பான அறிவிப்புக்கு முன்னதாகவே, இந்தக் கூட்டணி 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை அறிவித்து ஆச்சரியம் அளித்தது. 2024-ம் ஆண்டில்தான் படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது. ஆனால், படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'புதுப்பேட்டை 2' படத்தில் செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகே 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் முதற்கட்ட பணிகளைக் கவனிக்கவுள்ளார் செல்வராகவன். ஏனென்றால், 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் முதற்கட்டப் பணிகளே ஓராண்டுக்கு நடைபெறவுள்ளது.
'புதுப்பேட்டை' படத்துக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு 'புதுப்பேட்டை 2' என்ற அறிவிப்பு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.