கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் அயலான்

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் அயலான்
Updated on
1 min read

கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு 'அயலான்' படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

24 ஏ.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அயலான்'. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

பைனான்ஸ் சிக்கல், கரோனா அச்சுறுத்தல் என நீண்ட மாதங்களாகவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் சென்னையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்கியது படக்குழு. அதில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கினார்கள்.

தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் பங்குபெறும் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நடனக் கலைஞர்கள் வைத்துப் பாடலொன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும், கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய நீண்ட காலமாகும்.

ஆகையால் அடுத்த 10 மாதங்களுக்கு முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகளை முடித்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. ஏனென்றால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட்டால், பொங்கல் பண்டிகை வரை புதிதாக வேறு எந்தவொரு பெரிய படமும் வெளியாகாது என்பதால் இந்தத் தேதியைத் தேர்வு செய்துள்ளது படக்குழு.

தற்போது பைனான்ஸ் சிக்கல் அனைத்தையும் தீர்த்துவைத்து, இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருவது நினைவுகூரத்தக்கது.

'அயலான்' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் தொடர்பாக, இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in