கே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் படம் டிராப்: காரணம் என்ன? - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்

கே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் படம் டிராப்: காரணம் என்ன? - திருப்பூர் சுப்பிரமணியம் விளக்கம்
Updated on
2 min read

கே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் இணையும் படத்தை டிராப் செய்ததற்கான காரணத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுத்து, புதிதாக ஒரு படம் தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பை திருப்பூர் சுப்பிரமணியம் செய்தார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்க சத்யராஜ் நாயகனாக நடிப்பதாக இருந்தது.

மேலும், பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது. இந்தப் படத்தின் முதலீடு 2 கோடி ரூபாய். இந்த 2 கோடி ரூபாயுமே 200 ஷேர்களாகப் பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது கூட்டுத் தயாரிப்பாக இந்தப் படத்தைத் திட்டமிட்டார்கள். இதனை திருப்பூர் சுப்பிரமணியம் - பிரமிட் நடராஜன் - ஆர்.பி.செளத்ரி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. 200 ஷேர்களுமே அறிவிக்கப்பட்ட உடனே விற்றுத் தீர்ந்தன.

மாதங்கள் கடந்தாலும் இந்தப் படத்தின் நிலை என்பது தெரியாமலேயே இருந்தது. தற்போது கே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் இணையும் படத்தை டிராப் செய்துவிட்டதாக அறிவித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"சுமார் 8 மாதங்களுக்கு முன்பு கே.எஸ்.ரவிகுமார் சார் இயக்கத்தில் சத்யராஜ் சார் நடிக்க ஒரு படம் குறித்துப் பேசியிருந்தோம். அது தொடர்பான வியாபாரத்தில் பங்குகள் விற்பனை குறித்தும் அறிவித்திருந்தோம். ஆனால், கரோனா அச்சுறுத்தல் என்பது ரொம்ப நீண்டுவிட்டதால் படப்பிடிப்பு தொடங்க முடியவில்லை.

இதற்கு இடையில் ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கித்தான் அந்தப் படத்தைப் பண்ணலாம் எனத் திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதே படத்தின் சாயலில்தான் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வந்தது. அந்த மாதிரி ஜானர் வகையில் சொல்கிறேன். ஓடிடி தளத்தில் அந்தப் படம் சரியாக எடுபடவில்லை. ஆகையால், அந்த தெலுங்குப் படம் வேண்டாம் என்று வேறொரு கதையைச் செய்தோம். அது சரியாகப் பொருந்தி வரவில்லை.

கரோனா அச்சுறுத்தல் நீண்ட மாதங்கள் நீண்டுவிட்டதால், அனைத்துப் படங்களுமே குழப்பமாகிவிட்டன. ஆகையால், இப்போதைக்கு கே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் இணையும் படத்தை டிராப் செய்துவிட்டோம். என்னோடு சேர்ந்து பயணிக்கலாம் என்று சொன்ன அனைவருக்கும் நன்றி. இது கஷ்டமான செய்திதான்.

இன்னும் 2 மாதங்கள் கழித்துதான் சென்னைக்கு வரலாம் என்று இருக்கிறேன். அங்கு வந்து பேசி ஒரு நல்ல படம் பண்ணலாம் என்று இருக்கிறேன். இன்னும் யாரிடமிருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. படம் தொடங்கும்போது அனைவரிடமும் சொல்லித்தான் தொடங்கினோம். ஆகையால், கைவிட்டதையும் சொல்ல வேண்டுமே என்று சொல்கிறேன். நான் சென்னை வந்து அவசியம் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரிவோம்".

இவ்வாறு திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in