

நடிகர் சங்கத்தை சரத்குமார் அணிக்கு மட்டும் தான் தாரை வார்க்க வேண்டுமா என்று நடிகர் விஷால் காட்டமாக கேட்டார்.
அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு தரப்பாக களத்தில் இருக்கிறார்கள். இவ்விரண்டு அணிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்கம் முன்வந்தது. இந்த சமரச முயற்சியை விஷால் அணி ஏற்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, "கடந்த 2 ஆண்டுகளாக சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம் பல்வேறு படங்களின் வெளியீட்டின் போது பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. எனவே இந்த அணியை ஆதரிப்பதே சிறப்பாக இருக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தார். இதனால் பெரும் சர்ச்சை உண்டானது.
இதுகுறித்து விஷாலை தொடர்பு கொண்டு பேசியபோது, "தயாரிப்பாளர் சங்கத்தின் சமரச முயற்சியை வரவேற்கிறேன். ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது. ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் சமரச முயற்சி பலன் தராது. ஆகையால், சமரச பேச்சுக்கு போகவில்லை. கடிதம் அனுப்பிவிட்டோம்.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு ஆதரவு கொடுத்துள்ளது. நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் நிறைய நல்லது பண்ணியதால் ஆதரவு என்கிறார்கள். அந்த சாதனைகளைச் சொல்லி சரத்குமார் ஓட்டு கேட்க வேண்டியது தானே? சமரச முயற்சி மூலமாக சரத்குமார் அணிக்கு நடிகர் சங்கத்தை தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா?
தேர்தல் வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. எங்கள் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே தீரும். முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சமரச பேச்சுக்கு அழைத்தால் கூட நான் போக மாட்டேன் என்று சொன்னதாக பொய் தகவல் பரப்புகிறார்கள். முதல்வர் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். ஜாதி, மொழி, இனப் பிரச்சினையால் நடிகர் சங்கத்தை உடைக்க முடியாது. நடிகர் சிம்பு மற்றும் ராதிகா எவ்வளவு திட்டினாலும் எந்த பதிலும் சொல்ல மாட்டேன்" என்று தெரிவித்தார்.