

மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருப்பதற்கு 'கத்துக்குட்டி' படக்குழு நன்றி தெரிவித்திருக்கிறது.
இரா.சரவணன் இயக்கத்தில் நரேன், சிருஷ்டி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 9-ம் தேதி வெளியான படம் 'கத்துக்குட்டி'. இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்று, திரையரங்குகளை அதிகப்படுத்தி இருக்கிறார்கள். மீத்தேன் திட்டத்தின் அபாயம் குறித்து இப்படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
இது குறித்து 'கத்துக்குட்டி' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மீத்தேனுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகத் தொடங்கப்பட்டன. அரசு ஊழியர்களும் மீத்தேனுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த 9-ம் தேதி வெளியான எங்களின் 'கத்துக்குட்டி' படம், மீத்தேன் குறித்த விழிப்புணர்வை பலப்படுத்தியது.
இந்நிலையில், தமிழக அரசு மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பது விவசாய மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது.
ஊருக்கே படியளக்கும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்ணில் மீத்தேன் திட்டத்தைக் கொண்டுவரத் துடித்த கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து, விரட்டி அடித்திருக்கிறது.
அதோடு மட்டும் அல்லாமல், காவிரி படுகைப் பகுதிகளில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு வெளிக்கொணர்தல், உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் எதிர்காலத்தில் தமிழக அரசை ஆலோசிக்காமல் இத்தகைய திட்டங்களைப் பற்றி யோசிக்கவே கூடாது எனவும் தமிழக அரசு கேட்டுக்கொண்டிருப்பது ஒவ்வொரு விவசாயியையும் நிம்மதி அடைய வைத்திருக்கிறது.
மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது எங்கள் 'கத்துக்குட்டி' படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் கருதி மகிழ்கிறோம்.
மீத்தேன் திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து மக்களின் மனசாட்சியாக நின்று அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 'கத்துக்குட்டி' படக்குழு ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது'' என்று அந்த அறிக்கையில் இயக்குநர் இரா.சரவணன் தெரிவித்துள்ளார்.