பிக் பாஸ் நிறைவு: புதிய படத்தைத் தொடங்கினார் ஆரி
பிக் பாஸ் முடிந்து வெளியே வந்தவுடன், ஆரி நடிக்கும் புதிய படத்துக்கான பூஜை நடைபெற்றது.
கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, ஜனவரி 17-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இறுதிப் போட்டியில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. ஆரியின் வெற்றிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
நேற்று (ஜனவரி 18) அதிகாலைதான் வீட்டுக்குத் திரும்பினார் ஆரி. உடனடியாகத் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ஷவுரியா புரொடக்ஷன்ஸ் மற்றும் அபின் ஃபிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் அபின் இயக்கவுள்ள இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் ஆரி.
க்ரைம், கமர்ஷியல் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் நாயகியாக வித்யா பிரதீப் நடிக்கவுள்ளார். வெளிநாடுகளில் கடந்த 10 வருடங்களாக எடிட்டராகவும், இந்தியா திரும்பி புகைப்படக் கலைஞராகவும் பணிபுரிந்து வந்த அபின், இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதுரை, திண்டுக்கல், பழனி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படத்தின் பூஜையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ஸ்டெர்லின் நித்தியா இசையமைப்பாளராகவும், பி.வி.கார்த்திக் ஒளிப்பதிவாளராகவும், கலை இயக்குநராக கமலநாதனும், பாடலாசிரியராக விவேக்கும், எடிட்டராக அருள் சித்தார்த்தும் பணிபுரியவுள்ளனர்.
