’மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம்: தயாரிப்பு தரப்பு நடவடிக்கை

’மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம்: தயாரிப்பு தரப்பு நடவடிக்கை
Updated on
1 min read

’மாஸ்டர்’ திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். பொங்கலை முன்னிட்டு படம் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன் படத்தின் முக்கியக் காட்சிகள் சில இணையத்தில் பரவின.

இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். யாரும் இந்தக் காட்சிகளைப் பகிராதீர்கள், எங்களுடைய ஒன்றரை ஆண்டு உழைப்பு என்று இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதனிடையே, எங்கிருந்து எப்படி இந்தக் காட்சிகள் வெளியாயின என்ற விசாரணையைத் தொடங்கியது படக்குழு. எங்கெல்லாம் படத்தின் ஹார்ட் டிஸ்க் கொடுத்தோம் மற்றும் லீக்கான காட்சிகளில் இடம்பெற்ற இடங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆராய்ந்து வந்தது. இதில் சென்னையில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றின் மூலம் லீக்காகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழகத்தில் சோனி புரொஜக்டர்கள் உள்ள திரையரங்குகளுக்குப் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மூலமாகவே அனுப்ப முடியும். அப்படிப் படத்தை அனுப்புவதற்கு முன்பு, ஒரு முறை முழுமையாகத் திரையிட்டு பரிசோதிப்பார்கள் செய்வார்கள். அப்படிச் செய்யும்போது தான் யாரோ மொபைலில் எடுத்து வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தீவிர ஆலோசனை நடந்தது. தற்போது இது தொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக ’மாஸ்டர்’ காட்சிகளைப் பதிவேற்றியதற்காக ரூ.25 கோடி நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in