ஜல்லிக்கட்டில் உயிர் பலியைத் தடுக்க பாதுகாப்பு அம்சங்கள்: அரவிந்த் சாமி யோசனை

ஜல்லிக்கட்டில் உயிர் பலியைத் தடுக்க பாதுகாப்பு அம்சங்கள்: அரவிந்த் சாமி யோசனை
Updated on
1 min read

ஜல்லிக்கட்டு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், சிராவயல், பாலமேடு, பெரியகலையம்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு ஆண்டையும் போல, இந்த ஆண்டும் சில உயிர் பலிகளும், பலருக்குக் காயமும் ஏற்பட்டது. கடும் முன்னேற்பாடுகளுடன் நடைபெற்றாலும், உயிர் பலியைத் தவிர்க்கவே முடியவில்லை. தற்போது இதைத் தடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் அரவிந்த் சாமி குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அரவிந்த் சாமி கூறியிருப்பதாவது:

"பாதுகாப்பு அம்சங்களைக் கூட்டுவதால் ஒரு விளையாட்டின் சுவாரஸ்யத்தைக் குறைந்துவிடும் என்பது ஏற்புடையது அல்ல. உதாரணத்துக்குப் பாதுகாப்பு அம்சங்களைச் சேர்ப்பதால் உயிர்களைப் பாதுகாக்கலாம், காயங்களைக் குறைக்கலாம்.

கிரிக்கெட், பாக்சிங், ஹாக்கி, ஆட்டோ ரேஸ், தற்காப்புக் கலைகள், சைக்கிளிங் என அனைத்திலும் கூட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களால் அந்தந்த விளையாட்டுகளே பிரபலமாகியுள்ளன. ஆகையால், ஜல்லிக்கட்டுக்கும் ஏன் வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்".

இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in