

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
'ஓகே கண்மணி 'படத்தை தொடர்ந்து, இயக்குநர் மணிரத்னம், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை இந்த வருடக் கடைசியில் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் நடிகர்களின் தேதிகள் கிடைக்காததாலும், படத்தை ஒரே நேரத்தில் தெலுங்கிலும் எடுக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாலும், படப்பிடிப்பு தள்ளிப் போனது.
இந்நிலையில், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படமாக்க திட்டமிட்டு இருப்பதால் துல்கர் சல்மான் சரியாக இருக்காது என்று படக்குழு நினைக்கிறது.
அதுமட்டுமன்றி, ராஜீவ் ரவி மற்றும் பிரதாப் போத்தன் இருவரும் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கிவிட்டார் துல்கர் சல்மான், இதனால், மணிரத்னம் படப்பிடிப்பு நடத்தவிருக்கும் தேதிகள் துல்கரிடம் இல்லை என கூறப்படுகிறது.
தற்போது கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் ஆகியரோடு தெலுங்கில் இருந்து முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
மணிரத்னத்தின் இந்தப் படத்துக்கும் வழக்கம் போல ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.