மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி?

மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி?
Updated on
1 min read

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டுள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். மார்ச் மாதம் தொடங்கவுள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 65-வது படமாகும்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படத்தை லோகேஷ் கனகராஜே இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'மாஸ்டர்' படத்துக்காக நீண்ட காலம் காத்திருப்பு, 50% இருக்கை உள்ளிட்ட காரணங்களுக்காக லலித் குமார் தயாரிப்பில் ஒரு படம் பண்ணச் சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய்.

அந்தப் படத்தைத்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் எனக் கூறுகிறார்கள். தற்போது கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தின் முதற்கட்டப் பணிகளைக் கவனித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறுகிறார்கள்.

இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்தபோது, "இப்போதைக்கு 'தளபதி 65' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய். அவருடைய அடுத்த படம் குறித்து வெளியாகும் தகவல் அனைத்தும் வதந்தி தான்" என்று தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in