

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு 'காக்கி' தலைப்பு கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஆகியவற்றை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டார்கள். இப்படத்துக்கு 'காக்கி' என தலைப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், 'காக்கி' என்ற தலைப்பை 'வாய்மை' இயக்குநர் செந்தில்குமார் தனது பெயரில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் செந்தில்குமாரிடம் பேசிய போது, "இயக்குநர் அட்லீ மற்றும் தாணு இருவருமே விஜய் படத்துக்கான தலைப்பை தீபாவளியன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். 'காக்கி' தலைப்பை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். அப்படத்துக்கான முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இத்தகவலை இயக்குநர் அட்லீ மற்றும் தாணு இருவரிடமும் தெரிவித்துவிட்டேன்" என்றார்.
தற்போது, விஜய் படத்துக்கு 'காக்கி' தலைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவி வருகிறது. விரைவில் தலைப்புக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.