வெளியானது 'மாஸ்டர்': ரசிகர்கள் உற்சாகம்

படங்கள்: மனோகரன்
படங்கள்: மனோகரன்
Updated on
1 min read

நீண்ட இடைவெளிக்குப் பின்பு வெளியானது 'மாஸ்டர்'. தமிழகமெங்கும் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை

சுமார் 10 மாதங்களாக வெளியிடாமல் காத்திருந்தது. நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், கரோனா அச்சுறுத்தல் இன்னும் குறையட்டும் என்று 'மாஸ்டர்' படக்குழு காத்திருந்தது. இறுதியாக பொங்கல் வெளியீடாக ஜனவரி 13-ம் தேதி வெளியீடு என்று அறிவித்தது. பின்பு விளம்பரப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தியது.

இன்று (ஜனவரி 13) எந்தவொரு தடங்கலுமின்றி அதிகாலை 3 மணியளவில் கே.டி.எம் பணிகள் தொடங்கப்பட்டது. 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. அதிகாலை முதலே விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் உற்சாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி தவிர்த்து 'மாஸ்டர்' படக்குழுவினர் அனைவருமே ஒன்றாக சென்னையிலுள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்தார்கள்.

தமிழகத்தில் சில ஊர்களில் முதன்முறையாக அதிகாலை காட்சியைத் திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

முதல் காட்சி முடிவுற்ற நிலையில், ரசிகர்கள் பலரும் 'மாஸ்டர்' படம் நன்றாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். விமர்சகர்கள் பார்வையில் 'மாஸ்டர்' எப்படி என்பது இன்னும் சில மணித்துளிகளில் தெரியவரும்.

மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால், 'மாஸ்டர்' படக்குழுவினர் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அடுத்த 3 நாட்களுக்கு முன்னணி திரையரங்குகள் அனைத்திலுமே 'மாஸ்டர்' டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in