Published : 12 Jan 2021 15:34 pm

Updated : 12 Jan 2021 20:40 pm

 

Published : 12 Jan 2021 03:34 PM
Last Updated : 12 Jan 2021 08:40 PM

பல பேர் முகமூடி போட்டுக்கொண்டு துரோகம் செய்கிறார்கள்: டி.ஆர் கண்ணீர்

trajendar-press-meet

சென்னை

பல பேர் முகமூடி போட்டுக்கொண்டு துரோகம் செய்கிறார்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசினார்.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.


பொங்கல் விடுமுறையைக் கணக்கில் வைத்து ஜனவரி 14-ம் தேதி 'ஈஸ்வரன்' வெளியாகவுள்ளது. தற்போது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினையை முன்வைத்து, 'ஈஸ்வரன்' படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (ஜனவரி 12) காலை டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அந்தச் சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியதாவது:

"'ஈஸ்வரன்' படத்தை நிறுத்திவிட வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்து கொண்டிருக்கிறார்கள். என்ன வேண்டுமானாலும் சதி செய்யட்டும், எதை எதிர்கொள்ள மனிதனுக்கு வேண்டும் மதி. அந்த மதியை நிர்ணயிப்பது விதி. மதியின் பிறை சூடியவன் ஈஸ்வரன். அவன் தலையில் இருப்பது மதி.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவர்களை எதிர்த்து நான் போட்டியிட்டேன். இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. சங்கத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக அத்தனை மாஃபியா கூட்டமும் சேர்த்து என்னைப் பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காக 'ஈஸ்வரன்' படத்துக்குத் தடை கேட்கிறார்கள்.

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினை. அந்தப் படத்துக்கு ஏற்பட்ட சிக்கலின் போது மூன்றரை கோடி ரூபாய் விட்டுக் கொடுத்தவர் சிம்பு. அந்தப் படத்திற்காக ஏற்பட்ட நஷ்டத்தை நடிகர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய அளவில் சட்டமில்லை. சிம்புவை எவ்வளவு அவமானப்படுத்த வேண்டுமோ, அவ்வளவு அவமானப்படுத்தினார் மைக்கேல் ராயப்பன்.

சிம்புவின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் இரண்டரை கோடி கட்ட வேண்டும் என்று சட்டம் போட்டனர் அப்போதைய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள். இது ஒருதலைப்பட்சமான முடிவு. இந்தியாவில் எந்தச் சங்கத்தில் இப்படியொரு சட்டம் போடப்பட்டுள்ளது. உடனடியாக இது தொடர்பாக வழக்குத் தொடுத்தார் சிம்பு. இது இன்னும் நிலுவையில் உள்ளது. அந்தப் பிரச்சினை மீண்டும் எடுத்து வைத்துப் பேசுவது நீதிமன்ற அவமதிப்பு என்று கடிதம் கொடுத்தும் கூட, 'ஈஸ்வரன்' வெளியாகும் சமயத்தில் எடுத்து வைத்துப் பேசுகிறார்கள்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து க்யூப் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள். அதில் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் 'ஈஸ்வரன்' படத்தை வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தை அவமதித்து இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம். மேலும், எங்களுக்கு அமைச்சரின் துணை இருக்கிறது என்று க்யூப் நிறுவனத்தினரை மிரட்டியுள்ளனர். உடனே அந்த அமைச்சருக்கு போன் போட்டுப் பேசினேன். அவரோ என் பெயரைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றார்.

பொங்கலுக்கு ஒரே ஒரு படம்தான் வெளியாக வேண்டும் என்பது என்னவொரு ஜனநாயகம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சினிமா பற்றி யாரும் எதுவும் கேட்க மாட்டார்களா? கடைசி நேரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களைக் கேட்க ஆளில்லையா? அனைத்துத் திரையரங்குகளிலும் பெரிய திரைப்படத்தை மட்டும்தான் போட வேண்டும் என்று எழுதப்படாத சட்டத்தைப் போட்டுள்ளனர்.

எனக்கும் என் மனைவிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்குச் சிகிச்சை எடுத்து வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டோம். யாரையும் சந்திக்காமல் இருந்தேன். இப்போது ஏன் வெளியே வந்துள்ளேன் என்றால், நான் பெற்ற பிள்ளை நடித்த படம் வெளியே வரவேண்டும் என்றால் நான் வெளியே வந்து ஆகவேண்டிய சூழல். பல பேர் முகமூடி போட்டுக் கொண்டு துரோகம் செய்கிறார்கள்.

'மாஸ்டர்' ரிலீஸாக வேண்டும். ஆனால், அதற்கு முன்னால் 'ஈஸ்வரன்' வந்துவிடக் கூடாது என்று பின்னால் நின்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையை விடப் போவதில்லை".

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

தவறவிடாதீர்!


EeswaranEeswaran releaseSilambarasanSimbuSusienthiranNidhi agerwalTrajendarTrajendar press meetOne minute newsஈஸ்வரன்ஈஸ்வரன் வெளியீட்டில் சிக்கல்சிலம்பரசன்சிம்புசுசீந்திரன்நிதி அகர்வால்தயாரிப்பாளர் சங்கம்அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x