திடீர் திருமணம்: மனம் திறந்த ஆனந்தி

திடீர் திருமணம்: மனம் திறந்த ஆனந்தி
Updated on
1 min read

தனக்குத் திருமணம் நடந்தது தொடர்பாக ஆனந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆனந்தி, ஜனவரி 7-ம் தேதி திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து அவர் அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கவில்லை. சில படங்கள் ஒப்புக் கொண்டுள்ளதால் திரையுலகினர் மத்தியில் அவரது திருமணம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

'மூடர் கூடம்' இயக்குநர் நவீனின் மைத்துனரான சாக்ரடீஸைத்தான் திருமணம் செய்துள்ளார் ஆனந்தி. இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னிச் சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘அலாவுதீனின் அற்புத கேமரா' படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இரு வீட்டாரின் சம்மதம் பெற்று இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

தற்போது தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஆனந்தி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

"உங்கள் வாழ்வின் எஞ்சிய நாட்களை நீங்கள் விரும்பும் ஒருவரோடு கழிக்க விரும்பும்போது, உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

பல ஆண்டுகளாக, பல்வேறு கடினமாகச் சூழல்களை ஒன்றாகக் கடந்து, ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்ட பின்னர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இவ்வுலகை வெற்றி கொள்ள முடியும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். கடந்த ஜனவரி 7 அன்று என் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒரு சிறிய நிகழ்வாக சாக்ரடீஸ் உடன் நடந்த எனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக எங்கள் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதவர்களை நாங்கள் மிஸ் செய்தோம்".

இவ்வாறு ஆனந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in