

'நானும் ரவுடிதான்' படத்தைத் தொடர்ந்து மீண்டும், விஜய்சேதுபதி படத்தை தயாரிக்க இருக்கிறார் தனுஷ்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
'நானும் ரவுடிதான்' படத்தின் வசூல் நன்றாக இருப்பதால், மீண்டும் விஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்து, ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார் தனுஷ். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தி இருக்கிறார்.
முதலில் சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து இரண்டு படங்களைத் தயாரித்தார் தனுஷ். அப்போது விஜய் சேதுபதிக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் படங்களைத் தயாரிக்கிறார் என்று பேச்சு நிலவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ம்ற்றொரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறார்.
விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர் யார் என்பது உள்ளிட்ட விஷயங்கள் எதையும் தனுஷ் வெளியிடவில்லை.