Published : 08 Jan 2021 05:50 PM
Last Updated : 08 Jan 2021 05:50 PM

ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்த நாள் ஸ்பெஷல்: புத்தாயிரத்தின் புது இசை வேந்தன் 

சென்னை

தமிழ் சினிமாவில் புத்தாயிரத்தின் தொடக்கத்தில் பயணத்தைத் தொடங்கி தன் புதுமையான இசைப் பாணியாலும், இசைக் கோர்ப்பிலும், ஒலிக் கலவைகளிலும், கருவிகளின் பயன்பாட்டிலும் தனித்துவம் மிக்க சிறப்பான அனுபவத்தைத் தந்து இசைக் கொடி நாட்டிய வேந்தர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இன்று (ஜனவரி 8) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ஆறு வயதில் தொடங்கிய பயணம்

பிரபல மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் ஷ்யாமிடம் கிட்டாரிஸ்டாகப் பணியாற்றியவரும், சில படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்துருப்பவருமான எஸ்.எம்.ஜெயராஜ், ஹாரிஸின் தந்தை. ஆறு வயதிலிருந்து முறையான இசைப் பயிற்சியைத் தொடங்கிவிட்டார் ஹாரிஸ். முதலில் கர்னாடக இசை பயின்றார். பன்னிரண்டு வயதில் இசைக் குழுக்களில் கிட்டாரிஸ்டானார். கீபோர்ட் இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 600 திரைப்படங்களில் இசை ப்ரோக்ராமராகவும், பல படங்களின் இசைக் கலைஞராகவும் பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், மணி ஷர்மா, கார்த்திக் ராஜா. யுவன் ஷங்கர் ராஜா என பலருடன் பணியாற்றியிருக்கிறார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தார்.

திரையிசையில் மைல்கல்

2001இல் வெளியான ‘மின்னலே’ அதன் இயக்குநர் கெளதம் மேனனுக்கு மட்டுமல்லாமல் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜுக்கும் அறிமுகப் படமானது. அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளைகொண்டன. ஒன்பது பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அனைத்தும் ஹிட். ‘ஓ மாமா’ என்னும் ஜாலியான அறிமுகப் பாடல், ‘ஏய் அழகிய தீயே’ என்னும் அழகான ஆண் காதல் பாடல், ’இவன் யாரோ’ என்னும் வேகமான டூயட் பாடல், காதலையும் மென்காமத்தையும் குழைத்து மயக்கிய ‘வசீகரா’ என்னும் பெண் குரல் பாடல், 'வெண்மதி வெண்மதியே நில்லு', ‘இரு விழி உனது’ எனப் பிரிவின் வலியைக் கடத்தும் பாடல்கள்... இவை மட்டுமா ‘மேடி மேடி’ என்னும் நாயகனுக்கான் தீம் மியூசிக்கும் ‘பூப்போல் பூப்போல்’ என்னும் நாயகிக்கான தீம் பாடலும்கூட இன்று கேட்டாலும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஆழ்ந்து ரசிக்கச் செய்பவை.

இதே ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் இந்தி மறு ஆக்கத்துக்கும் ஹாரிஸே இசையமைத்தார். அங்கும் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தன. இதே ஆண்டில் வெளியான மற்ற தமிழ்ப் படங்களான ‘மஜ்னு’, ‘12பி’ படத்திலும் மறக்க முடியாத வெற்றிப் பாடல்கள் அமைந்தன. இவற்றின் மூலம் 1992இல் நிகழ்ந்த ரஹ்மானின் வருகைக்குப் பிறகு 2001இல் நிகழ்ந்த ஹாரிஸின் வருகை தமிழ் சினிமா இசைத் துறையில் ஒரு மைல்கல் தருணம் என்று அனைவரையும் கருத வைத்தது.

பல வகைமைகளில் சுவையான பாடல்கள்

2002இல் ‘சாமுராய்’, ‘லேசா லேசா’ படங்களிலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. 2003இல் ‘சாமி’ படத்தில் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ போன்ற பாடல்களின் மூலம் தனக்குத் தர லோக்கலாக இறங்கி அடிக்கவும் தெரியும் என்று நிரூபித்தார். அதே ஆண்டு வெளியான ‘கோவில்’ என்னும் அழகான கிராமியக் காதல் படத்தில் அழகான மென்மையான பாடல்களைக் கொடுத்தார். இப்படியாக பலவேறு வகை இசையிலும் தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ அவருடைய திரை வாழ்வில் இன்னொரு மைல்கல் படமாக அமைந்தது.

ரஹ்மானின் மாற்று

தொடர்ந்து பல வெற்றிகரமான பாடல்களை வழங்கி வந்த ஹாரிஸ் 2005இல் வெளியான ‘அந்நியன்’ படத்தில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றினார். அதுவரை ஷங்கர் இயக்கியிருந்த ஆறு படங்களுக்கும் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். ‘அந்நியன்’ படத்துக்கு ரஹ்மானால் பணியாற்ற முடியாத சூழல் உருவானபோது ஷங்கர் ஹாரிஸைத் தேர்ந்தெடுத்தார். ஹாரிஸும் ரஹ்மான் இல்லாத குறையைத் துளிகூட உணர முடியாத அளவு தன் பாணியில் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பங்களித்தார். 2012இல் மீண்டும் ‘நண்பன்’ படத்தின் ஷங்கருடன் பணியாற்றி அந்தப் படத்திலும் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தார்.

வெற்றிகரமான இயக்குநர்களுடன் வெற்றிக் கூட்டணி

கெளதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்-இசையமைப்பாளர் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. பல காலத்தை வென்ற பாடல்கள் ரசிகர்களுக்குக் கிடைத்தன. ‘மின்னலே’ தொடங்கி ‘வாரணம் ஆயிரம்’ வரை தொடர்ந்த இந்தக் கூட்டணி, அதன் பிறகு ஏற்பட்ட ஒரு சிறு மனஸ்தாபத்தால் பிரிந்தாலும் மீண்டும் 2015இல் வெளியான ’என்னை அறிந்தால்’ படத்தில் மீண்டும் இணைந்தது. அந்தப் படத்தில் ‘மழை வரப் போகுதே’ உள்ளிட்ட அருமையான பாடல்கள் அமைந்தன. தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிவருகிறார்கள்.

கெளதம் தவிர மறைந்த இயக்குநர் ஜீவா’, கே.வி.ஆனந்த் ஆகிய வெற்றிகரமான இயக்குநர்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் ஆஸ்தான இசையமைப்பாளர். ஜீவாவுடன் அவர் பணியாற்றிய ‘உள்ளம் கேட்குமே’, ‘உன்னாலே உன்னாலே’, ‘தாம்தூம்’ படங்களில் காலத்தால் அழிக்க முடியாத மெலடி பாடல்களும் தீம் இசைகளும் அமைந்தன.

’அயன்’, கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’ உள்ளிட்ட கே.வி.ஆனந்த் படங்களிலும் பல சிறப்பான பாடல்கள் கிடைத்துள்ளன. ஹரி, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பல வெற்றிப் படங்களை வழங்கிய முக்கியமான இயக்குநர்களுடன் அவ்வப்போது கைகோக்கும் ஹாரிஸ் அவர்கள் படங்களிலும் முக்கியமான பல வெற்றிப் பாடல்களை அளித்துள்ளார். செல்வராகவன் (இரண்டாம் உலகம்), கே.எஸ்.ரவிகுமார் (ஆதவன்), லிங்குசாமி (பீமா), பிரபுதேவா (எங்கேயும் காதல்), ஐ.அகமது (என்றென்றும் புன்னகை) எம்.ராஜேஷ் (ஒரு கல் ஒரு கண்ணாடி), ஆனந்த் ஷங்கர் (இருமுகன்), விஜய் (’வனமகன்’-ஹாரிஸின் 50ஆம் படம்) ஆகியோருடன் ஓரிரு படங்களில் பணியாற்றி சில மறக்க முடியாத வெற்றிப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ‘கர்சானா’ (’காக்கா காக்க’ மறு ஆக்கம்), ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

நவீன இசையின் தூதுவர்

ரஹ்மானுக்கும் ஹாரிஸுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே தேர்ந்தெடுத்து படங்களில் பணியாற்றுகிறவர்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளை நெருங்கும் ஹாரிஸின் திரைவாழ்வில் அறுபதுக்கும் குறைவான படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார். அதுவும் அண்மை ஆண்டுகளில் அவருடைய படங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதால் ரசிகர்கள் ஏக்கம் அடைந்திருக்கின்றனர். ரஹ்மானைப் போலவே ஹாரிஸும் மேற்கத்திய, பன்னாட்டு இசை வடிவங்களை அதிகமாகத் தமிழுக்குக் கொண்டுவந்தவர். பல புதிய இசைக் கலவைகளை, கருவிகளை ஒலிகளைப் பயன்படுத்தியவர். அதே நேரம் ரஹ்மானைப் பிரதி எடுத்ததுபோல் அல்லாமல் முற்றிலும் புதியதாக ஒலித்தது ஹாரிஸின் இசை.

மெலடிகளின் நாயகன்

ஹாரிஸின் காதல் மெலடி பாடல்களுக்காகவே அவருக்குத் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தனிச் சிறப்பான தவிர்க்க முடியாத இடம் உண்டு. ’மின்னலே’ படத்தில் ‘வசீகரா’, ’கலாபக் காதலா’ (’காக்க காக்க’), ‘உன் சிரிப்பினில்’ (பச்சைக்கிளி முத்துச்சரம்), ‘மூங்கில் காடுகளே’ (’சாமுராய்’), ‘பூவே வாய் பேசும்போது’ (12பி), ‘ஓ மனமே’ (உள்ளம் கேட்குமே), ‘ஜூன் போனால்’ (உன்னாலே உன்னாலே), ’யாரோ மனதிலே’ (தாம்தூம்), ‘என் அன்பே’ (சத்யம்), ’அனல் மேலே பனித்துளி’ (வாரணம் ஆயிரம்), ‘விழி மூடி யோசித்தால்’ (அயன்), ‘யம்மா யம்மா’ (ஏழாம் அறிவு) ’உனக்கென்ன வேணும் சொல்லு’ (என்னை அறிந்தால்), ‘கண்ணை விட்டு’ (இருமுகன்) என உயிரை உருக்கும் பல மெலடி பாடல்களை அளித்துள்ளார். இவை அனைத்தும் அவை வெளியான ஆண்டுகளில் அதிகம் கேட்கப்பட்ட பாடல்கள் மட்டுமல்ல எப்போதும் விரும்பிக் கேட்கப்படும் இனி வரும் காலங்களிலும் கேட்கப்படப்போகும் பாடல்கள்

அதே நேரம் ‘அஞ்சல’ (’வாரணம் ஆயிரம்’), ‘டமக்கு டமக்கு’ (ஆதவன்), ’வேணாம் மச்சான் வேணாம்’ (ஒரு கல் ஒரு கண்ணாடி) போன்ற ஆட்டம் போட வைக்கும் அதிவேகப் பாடல்கள் பலவற்றையும் சிறப்பாகத் தந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான வெற்றிகரமான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் பலப் பல வெற்றிப் படங்களையும் பாடல்களையும் கொடுக்க வேண்டும் விருதுகள் பலவற்றை வாரிக் குவிக்க வேண்டும் ரசிகர்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x