

இணையத்தில் வைரலான மருத்துவரின் பதிவுக்கு இயக்குநர் டிகே பதிலடி கொடுத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. உலகமெங்கும் இந்தப் படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காகத் திரையரங்குகளுக்கு 100% இருக்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது படக்குழு.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விஜய்யும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து 100% இருக்கைக்கு அனுமதி வழங்கியது தமிழக அரசு. ஆனால், இந்த அனுமதியால் கடும் பின்விளைவுகளைச் சந்தித்து வருகிறது தமிழக அரசு.
இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதில் மருத்துவர் ஒருவருடைய பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. தற்போது அந்தப் பதிவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் 'யாமிருக்க பயமே' இயக்குநர் டி.கே.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"ஏசி வசதி கொண்ட பார்களும் கிளப்களும் திறக்கப்பட்டபோது ஏன் மருத்துவர்கள் கடிதம் எழுதவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. சினிமாவைத் தாக்கினால் 15 நிமிடத்துக்கான புகழைப் பெறுவது சுலபம் என்று தோன்றுகிறது”.
இவ்வாறு இயக்குநர் டி.கே. தெரிவித்துள்ளார்.