

'பாகுபலி 3' உருவாகிறது என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு இயக்குநர் ராஜமெளலி விளக்கமளித்திருக்கிறார்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்து, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய இப்படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது.
'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவக்கி, நவம்பர் 2016-ல் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இன்று (அக்டோபர் 24) மா தெலுங்கு தொலைக்காட்சியில் 'பாகுபலி' திரைப்படம் முதல் முறையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் 'பாகுபலி' மூன்றாம் பாகம் வெளிவர இருக்கிறது என தகவல்கள் வெளியானது. மூன்றாம் பாகம் குறித்து பலரும் விவாதித்து வந்தார்கள்.
'பாகுபலி' 3-ம் பாகம் குறித்து இயக்குநர் ராஜமெளலி " கதை 2-ஆம் பாகத்தோடு முடியும். நாங்கள் இழுக்க விரும்பவில்லை. ஆனால் ’பாகுபலி உலகம்' நீங்கள் இதுவரை நினைத்துப் பார்க்காத வகையில் தொடரும். நேரம் வரும்போது விரிவாகச் சொல்கிறேன். வதந்திகளை நம்பவேண்டாம். எனக்கு மட்டுமே அடுத்து வருவதைப் பற்றி தெரியும்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.