

தனது 54-வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த 4 வயதுச் சிறுமியின் காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புதன்கிழமை (ஜனவரி 6) அன்று ரஹ்மான் பிறந்த நாளை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பல்வேறு பிரபலங்களும், திரைத்துறையில் ரஹ்மானுக்கு இருக்கும் ரசிகர்களும் கூட தங்கள் வாழ்த்துகளைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதில் குறிப்பாக மலேசியாவிலிருந்து வாழ்த்து தெரிவித்த 4 வயதுச் சிறுமியின் காணொலியை ரஹ்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலியில், "பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். என் பெயர் ஜனனி, எனக்கு 4 வயது. நான் உங்களுக்காக ஒரு பாடல் பாடப்போகிறேன்" என்று அந்தச் சிறுமி அந்தக் காணொலியில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
இதற்கு பதில் தெரிவித்திருக்கும் ரஹ்மான், "கனிவான வாழ்த்துகளுக்கு நன்றி ஜனனி. வாழ்த்திய மற்ற அனைவருக்கும் நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.