

விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். இந்த கெட்டப்கள் அடங்கிய போஸ்டரை தான் படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டது.
கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் சில முக்கிய காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறது படக்குழு. இதில் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார், மிருணாளினி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள்.
தற்போது ஜனவரி 9-ம் தேதி 'கோப்ரா' படத்தின் டீஸர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று (ஜனவரி 6) இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்குப் பிறந்த நாள் வாழ்த்தாகப் பிரத்தியேக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது படக்குழு. அதில் தான் ஜனவரி 9-ம் தேதி டீஸர் வெளியீட்டை உறுதி செய்துள்ளது படக்குழு.
ஒளிப்பதிவாளராக ஹரிஷ் கண்ணன், எடிட்டராக புவன் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். இவரிடம் தான் 'மாஸ்டர்' படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் இருக்கிறது. ஆகையால் ஜனவரி 13-ம் தேதி 'மாஸ்டர்' படத்துடன் 'கோப்ரா' டீஸரும் வெளியாகும் என்பது உறுதியாகிறது.