

நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தையிலேயே இருந்த வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி ஒரு வழியாக சூரி படத்தின் மூலம் இணைந்துள்ளது.
'அசுரன்' படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.
இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
கடும் குளிரான இடங்களில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், வெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டார். பின்பு கிஷோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவரும் விலகினார். இதனால் இந்தக் கதாபாத்திரத்தில் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், பாரதிராஜா நடிக்கவிருந்த வயதான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக நேற்று (ஜனவரி 4) வயதான கதாபாத்திரத்துக்கான லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜய் சேதுபதி.
முதலில் 'வடசென்னை' படத்திலேயே வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி இணைந்தது. சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறிப்பிடத்தக்கது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளது ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.