

விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
விஜய் சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முகிழ்’. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். புதுமுகம் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் இரு தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது.
இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் கூறியுள்ளதாவது:
''மிகவும் இயல்பான ஒரு படம் இது. பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள், அந்தக் குழந்தைக்கு ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை இப்படத்தில் அலசியுள்ளோம். இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது''.
இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.
இப்படத்திற்கு ரேவா என்ற பெண் இசையமைத்துள்ளார். சத்யா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் கோவிந்தராஜ் எடிட்டராகப் பணியாற்றியுள்ளார். இவர் '96' படத்தில் எடிட்டராகப் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனங்களிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.