

முன்னரே ஷங்கர் படத்தை ஒப்புக் கொண்டதால் 'பாகுபலி 2'வில் இருந்து விலகி விட்டதாக கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன் தெரிவித்தார்.
'பாகுபலி' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை 'எந்திரன்', 'ஐ' உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் மேற்பார்வையில் செய்தார்கள்.கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விரைவில் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
'பாகுபலி 2'வில் ஸ்ரீனிவாஸ் மோகனுக்கு பதிலாக கமலக்கண்ணன் பணியாற்றுவார் என்று 'பாகுபலி' குழு தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தது. எதனால் ஸ்ரீனிவாஸ் மோகன் விலகினார், என்ன காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தன.
விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ரீனிவாஸ் மோகனிடம் கேட்ட போது, "'பாகுபலி' படப்பிடிப்பின் போதே நான் ஷங்கர் சார் படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகி விட்டேன். 'பாகுபலி 2'வில் பணியாற்ற முடியாது என்பது எனக்கு முன்பே தெரியும். ஏனென்றால் ஒரே சமயத்தில் இரண்டு பெரிய படங்களில் பணியாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று.
மேலும், 'பாகுபலி 2' படத்துக்கான 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'பாகுபலி' படத்துக்கு கிராபிக்ஸ் காட்சிகளில் நான் பணியாற்றி இருப்பதால், இரண்டு பாகத்துக்கு உதவிகள் தேவைப்பட்டால் கண்டிப்பாக பண்ணிக் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.