

‘கோ2’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் லியோன் ஜேம்ஸ். முதல் படத்துக்கு இசையமைத்துள்ள உற்சாகத்தில் இருக்கும் அவரைச் சந்தித்தோம். “என் முதல் படத்துக்கு ரசிகர்கள் எந்த அளவு வரவேற்பு அளிக்கப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றவாறு பேசத் தொடங்கினார்.
‘கோ 2’ படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
‘காஞ்சனா 2’ படத்தில் நான் 2 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். இதைத்தொடர்ந்து ‘கோ 2’ படத்துக்கு இசையமைக்க முடியுமா என்று என்னிடம் கேட்டார்கள். எனக்கும் தனியாக படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் கேட்டவுடனே சம்மதித்தேன்.
இது அரசியல் சார்ந்த படம் என்பதால் நிறைய இடங்களில் என்னை நிரூபிக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. சில காதல் காட்சிகள், 5 பாடல்கள் என இசையில் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார்கள். ‘கோ’ படத்தில் எப்படி வித்தியாசமான இசை இருந்ததோ, அதைபோல் இந்தப் படத்திலும் நீங்கள் வித்தியாசமான இசையை எதிர்பார்க்க முடியும். படத்துக்கு பின்னணி இசையமைக்கும் பணியை இனிதான் தொடங்கப் போகிறேன். ரசிகர்களால் பேசப்படும் வகையில் இதன் பின்னணி இசையை வித்தியாசமாக அமைக்க திட்டமிட்டுள்ளேன்.
நீங்கள் எப்படி இந்தத் துறையை தேர்ந்தெடுத்தீர்கள்?
சின்ன வயதில் இருந்தே நான் பியானோ வாசிப்பேன். எனது அப்பாவின் பெயர் நோயல் ஜேம்ஸ், அவரும் பியானோ வாசிப்பார். சில பாடல்களைக்கூட பாடியிருக்கிறார். அதனால் எங்கள் வீட்டில் எப்போதுமே இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். எனக்கும் சின்ன வயசில் இருந்தே இசை மீது ஆர்வம் வந்தது. சிறு வயதிலேயே இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்பினேன். நிறைய இசை நிகழ்ச்சிகளுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் கீ-போர்டு வாசித்திருக்கிறேன்.
உங்களுக்கு பிடித்த இசையமைப் பாளர் யார்?
நான் நிறைய இசையமைப் பாளர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். எனக்கு சந்தோஷ் நாராயணனின் இசை மிகவும் பிடிக்கும். அவரோடு நான் 3 படங்களில் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய இசையில் கமர்ஷியல் மட்டுமன்றி நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கும். நண்பர் என்பதையும் கடந்து எனக்கு அவருடைய இசையின் மீது ஈர்ப்பு அதிகம்.
அனிருத்தும் எனக்கு நண்பர். இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். ஒரே இசைக்குழுவில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.
இசைக்கு பாடல் வரிகள் எழுதுவது, பாடல் வரிகளுக்கு இசையமைப்பது.. இதில் எது உங்களுக்கு பிடிக்கும்?
எனக்கு ரெண்டுமே பிடிக்கும். ஏனென்றால் இரண்டிலுமே வெவ் வேறு மாதிரியான இசை வடிவம் வரும். படத்தின் பாடல் வரும் இடம் தெரிந்த உடன், அதற்கு தகுந்தாற் போல இசையமைப்பேன். அதற்கு வரிகள் சேர்க்கும் போது இன்னும் வலுவாக இருக்கும். ஒருசில பாடல்களில் வரிகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல இசையமைப்பேன்.
எந்த மாதிரியான படங்களுக்கு இசையமைக்க விரும்புகிறீர்கள்?
எனக்கு காதல் பாடல்களுக்கு இசையமைக்க பிடிக்கும். ஆகையால் முழுக்க காதல் சம்பந்தப்பட்ட படம் ஒன்றுக்கு இசையமைக்க வேண்டும் என்பது என் ஆசை. அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்.