

'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படத்தின் முன் தயாரிப்புக்கே ஒரு வருடம் தேவைப்படும் என்று நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.
தனுஷ் நாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்பதை செல்வராகவன் வெள்ளிக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து பல ரசிகர்கள், பிரபலங்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
படம் பற்றி பகிர்ந்திருக்கும் நாயகன் தனுஷ், "பிரம்மாண்டமான படைப்பு. முன் தயாரிப்புக்கே ஒரு வருடமாகும். ஆனால் ஆசான் செல்வராகவனிடமிருந்து ஒரு கனவுத் திரைப்படம். நீண்ட கால காத்திருப்பு. ஆனால் அந்த காத்திருப்புக்கு உரிய மதிப்பு தர எங்கள் சிறந்த உழைப்பைத் தருவோம். ஆயிரத்தில் ஒருவன் 2, இளவரசன் 2024ஆம் ஆண்டு மீண்டும் வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
’ஆயிரத்தில் ஒருவன்’ முதல் பாகம் முடியும் போது சோழர் பரம்பரையில் உயிரோடு இருக்கும் ஒரே ஒரு நபரான, சிறுவனான இளவரசனை மட்டும், கார்த்தியின் முத்து கதாபாத்திரம் காப்பாற்றி கொண்டு செல்வது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். எனவே இளவரசன் 2024ல் திரும்ப வருகிறார் என்று தனுஷ் குறிப்பிட்டிருப்பது அந்த சிறுவன் கதாபாத்திரத்தைத்தான் என்றும், கார்த்தி காப்பாற்றிக் கொண்டு சென்ற இளவரசன் தான் தனுஷ் என்றும் ரசிகர்கள் தங்கள் பங்குக்கு, தங்களின் கற்பனைகளப் பகிர்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஒரு படம் தயாராகிறது. இந்தப் படம் முடிந்த பிறகே 'ஆயிரத்தில் ஒருவன் 2'வுக்கான அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.