

தனுஷ் நாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்பதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு வெளியான சாகசக் கனவுருப்புனைவுத் (adventure fantasy) திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் 2-3 வருடங்கள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வெளியான சமயத்த்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஏமாற்றம் தந்தது.
'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கென பிரத்யேகமான ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகி காலப்போக்கில் பலராலும் கொண்டாடப்படும் 'கல்ட்' திரைப்படமாக தற்போது பார்க்கப்படுகிறது. எதிர்கால ரசிகர்களுக்கான படம், அதை சீக்கிரமே செல்வராகவன் எடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி, அவ்வபோது திரையரங்குகளில் மறுவெளியீடும் கண்டுவருகிறது. சமீபத்தில் கூட தமிழகம் முழுக்க பல்வேறு திரையரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்பட்டது.
இரண்டாவது பாகத்துக்கான முன்னோட்டத்துடனேயே முதல் பாகம் முடிந்தது. ஆனால் அப்போது வசூல் ரீதியாகப் படம் தோல்வியானதால் இரண்டாவது பாகம் எடுப்பது பற்றி இயக்குநர் செல்வராகவன் தெரிவிக்கவில்லை. கடந்த சில வருடங்களாக படத்தைப் பற்றிய பிம்பம் ரசிகர்கள் மத்தியில் மாறியதால் இரண்டாவது பாகம் எப்போது என்ற கேள்வி இயக்குநர் செல்வராகவனிடம் தொடர்ந்து கேட்கப்பட்டு வந்தது. அவரும் கதை தயாராக உள்ளதாக செல்வராகவனே சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார், மேலும் நடிகர் பார்த்திபனிடம், மீண்டும் நாம் 'ஆயிரத்தில் ஒருவன் 2'வில் இணைவோம் என்று தெரிவித்திருந்தார்.
இப்போது இது குறித்து செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த செல்வராகவன், "இது வரை கேட்டிருந்த ,காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்" என்று குறிப்பிட்டு, ஓவியமாக வரையப்பட்டிருக்கும் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்திருந்தார். ட்வீட்டிலும், போஸ்டரிலும் தனுஷ் நாயகனாக நடிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'ஆயிரத்தில் ஒருவன்' மறுவெளியீடைக் கொண்டாடி வரும் ரசிகர்களும், நீண்ட நாட்களாக இரண்டாம் பாகம் வேண்டும் என்று கேட்டு வரும் இயக்குநர் செல்வராகவனின் ரசிகர்களும் தங்கள் விருப்பம் நிறைவேறியதைப் பற்றி சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
பிரம்மாண்டமான திரைப்படம் என்பதால் 2024ஆம் ஆண்டே திரைப்படம் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.