’சின்னத் தம்பி’ திரைப்படத் தயாரிப்பாளர் கே பாலு காலமானார்: பிரபலங்கள் இரங்கல்

’சின்னத் தம்பி’ திரைப்படத் தயாரிப்பாளர் கே பாலு காலமானார்: பிரபலங்கள் இரங்கல்
Updated on
1 min read

பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே பாலு காலமானார். இவர் சின்னத் தம்பி, பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்தவர்.

கேபி ஃபிலிம்ஸ் சார்பாக ’சின்னத்தம்பி’, ’பாஞ்சாலங்குறிச்சி’, ’ஆகா என்னப் பொருத்தம்’ உள்ளிட்ட, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், ராம்கி, அர்ஜுன் என பல நாயகர்களின் வெற்றிப் படங்களை பாலு தயாரித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இவர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இருப்பதும் உறுதியானது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த பாலு வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பாலுவின் மறைவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் நடிகர்கள் சரத்குமார், ராதிகா, தயாரிப்பாளர் தனஞ்ஜயன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

’’கேபி பிலிம்ஸ் பாலுவின் திடீர் மறைவால் அதிர்ச்சியடைந்தேன், வருத்தமடைகிறேன். சீக்கிரம் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். திரைத்துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in