Published : 01 Jan 2021 07:15 PM
Last Updated : 01 Jan 2021 08:51 PM
நம் வாழ்வில் இரண்டறக் கலந்த விஷயங்களில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. பாடல்களை முணுமுணுக்காதவர்கள் வெகு குறைவுதான். நம் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து விட்ட எத்தனையோ பாடல்கள் உண்டு. நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பாடல்கள் ஈர்த்திருக்கும். திரும்பத் திரும்பக் கேட்போம். கேட்டுக்கேட்டு ரசிப்போம். ரசித்து ரசித்துப் பூரிப்போம். இப்படி நமக்கும் பாடலுக்குமான பந்தம் போல், காலத்துக்கும் பாட்டுக்கும் கூட தொடர்பு உண்டு. அப்படியொரு காலம்... புத்தாண்டின் தொடக்கம். அந்தத் தொடக்கத்தில் பிணைந்திருக்கும் பாடல்... ‘ நான் தான் சகலகலாவல்லவன்’ எனும் ‘ஹாப்பி நியூ இயர்’ பாடல்!
82ம் ஆண்டுக்கு முன்பு, ஆங்கிலப் புத்தாண்டை எந்தப் பாடலைக் கொண்டு கொண்டாடினோமோ? ஆனால், 82ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கி இதோ... 2021ன் புத்தாண்டு வரை, 2020ம் ஆண்டு முடிந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒலிபரப்புகிற பாடல்... ‘விஷ் யூ ஹாப்பி நியூ இயர்’ என்கிற ‘சகலகலா வல்லவன்’ படத்தின் பாடலாகத்தான் இருக்கிறது.
ஏவி.எம் எனும் பாரம்பரியம் மிக்க நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரித்த படம் ‘சகலகலாவல்லவன்’. கமல், அம்பிகா, ரவீந்தர், சில்க் ஸ்மிதா, வி.கே.ராமசாமி, புஷ்பலதா, துளசி, ஒய்.ஜி.மகேந்திரன், தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட, அனைத்து ஏரியா ரசிகர்களையும் குஷிப்படுத்துகிற படமாக அமைந்தது ‘சகலகலா வல்லவன்’. பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ஜுடோ ரத்தினத்தின் சண்டைக்காட்சிகள் மிரட்டின. கிராமத்து கேரக்டரும் இடைவேளைக்குப் பின்னர் ஃபாரின் ரிட்டர்ன் கேரக்டரும் என கமல் நடிப்பில் பிரமாதப்படுத்தினார்.
கவிஞர் வாலி பாடல்கள் எழுத, இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ‘அம்மன் கோவில் கிழக்காலே’ எனும் டைட்டில் பாடலை இளையராஜாவே பாடியிருந்தார். அநேகமாக, இந்தக் காலகட்டத்தில்தான் ‘இளையராஜா டைட்டில் பாட்டு பாடினால், அந்தப் படம் பிரமாண்டமான வெற்றியை பெறும்’ எனும் சென்டிமென்ட், திரையுலகில் ஏற்பட்டது.
‘கட்டவண்டி கட்டவண்டி’ என்ற பாடல் ஆண் குரலிலும் பெண் குரலிலுமாக இரண்டு முறை வந்தது. இரண்டுமே ஹிட்டடித்தது. ‘நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலும் இன்றைக்கும் ஹிட் வரிசைப் பாடல். முக்கியமாக, நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி யம்மா’ எனும் பாடல் அடைந்த வெற்றிக்கு எல்லையே இல்லை. இளையராஜா, எஸ்.பி.பி. மலேசியா வாசுதேவன் என பாடகர்களையும் வாலியின் பாடல் வரிகளையும் இன்றைக்கும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!
எல்லாவற்றையும் விட முக்கியமாக, காலங்கள் கடந்த பாடலாக, காலத்துக்குமான பாடலாக, காலத்துக்கு தொடர்பு உள்ள பாடலாக ‘சகலகலாவல்லவன்’ படத்தில் அமைந்த ‘விஷ் யூ ஹாப்பி நியூ இயர்’ ‘நான் தான் சகலகலாவல்லவன்’ என்ற பாடல் அடைந்த வெற்றி குறித்தும் பாடல் தந்த தாக்கம் குறித்தும் பாடல் நம் கொண்டாட்டத்துடன் இணைந்த பிரிக்கமுடியாத பந்தம் குறித்தும் சொல்லவே தேவையில்லை.
1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்தப் படம், அந்த வருடத்தின் மிகப்பெரிய வசூல் குவித்த படமாக அமைந்தது. அதுமட்டுமா? முந்தைய வருடங்களில் வெளியான ‘திரிசூலம்’ முதலான படங்களின் வசூல் சாதனைகளையெல்லாம் முறியடித்தது ‘சகலகலாவல்லவன்’.
திரையிட்ட தியேட்டர்கள் பலவற்றிலும் 200 நாட்களைக் கடந்து ஓடியது. 82ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு தொடங்கி 83ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று, ‘விஷ்யூ ஹாப்பி நியூ இயர்’ என்கிற ‘சகலகலாவல்லவன்’ பாடலே ஒலிபரப்பப்பட்டது. டீக்கடைகளிலும் தியேட்டர்களிலும் வானொலிகளிலும் தூர்தர்ஷனிலும் இந்தப் பாடலே இடம்பிடித்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில், டிசம்பர் 31ம் தேதி இரவுக்காட்சி வேறு ஏதோவொரு படம் ஓடிக்கொண்டிருக்கும். சரியாக 12 மணி வரும்போது, ஓடிக்கொண்டிருக்கும் படத்தை நிறுத்திவிட்டு, ‘சகலகலாவல்லவன்’ படத்தின் ‘நான் தான் சகலகலாவல்லவன்’ என்ற பாடலை ஒளிபரப்புவார்கள். எல்லோரும் விசில் பறக்கவிடுவார்கள். கரவொலி எழுப்புவார்கள். குத்தாட்டம் போடுவார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள். 83ம் ஆண்டு ஆங்கிலப்புத்தாண்டின் போது தொடங்கிய காலத்துக்கும் இந்தப் பாடலுக்குமான பந்தம் 2021ம் ஆண்டிலும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
’இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெறும் என்றுதான் நம்பினோம். ஆனால், அனைத்துப் பாடல்களுமே இன்றுவரைக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல்களாக இருக்கும் என்று நினைக்கவில்லை. முக்கியமா, ‘ஹாப்பி நியூ இயர்’ பாடல் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்கிற பாடலாக அமையும் என்றெல்லாம் நினைக்கவே இல்லை. இளையராஜாவின் இசை அப்படியானது’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார்.
கமலின் நடிப்பு, ஆட்டம், இளையராஜாவின் இசை, வாலியின் வரிகள், முக்கியமாக எஸ்.பி.பி.யின் வசீகரக் குரல்... என இன்றைக்கும் ஒவ்வொரு புத்தாண்டையும் வரவேற்றுக் கொண்டிருக்கிறான் ‘சகலகலா வல்லவன்’.
37 வருடங்களாக ‘ஹாப்பி நியூ இயர்’ சொல்லிக்கொண்டிருக்கிறான் ‘சகலகலாவல்லவன்’. ‘இளமை இதோ இதோ’ என்ற இந்தப் புத்தாண்டுப் பாடலுக்கு வயது கூடவே இல்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!