

'மாஸ்டர் திரைப்படத்தைத் திரையிரங்கில் பார்ப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கை முடிந்து படத்தின் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
ஜனவரி 13-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் 'மாஸ்டர்' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 14-ம் தேதி இந்தி டப்பிங்கான 'விஜய் தி மாஸ்டர்' வெளியாகும் எனவும் உறுதி செய்துள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா அச்சுறுத்தல் முடிந்து வெளியாகவுள்ள பெரிய நடிகரின் படமாக 'மாஸ்டர்' அமைந்துள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓடிடி தளத்தில் வெளியிடாமல் காத்திருந்து திரையரங்க வெளியீட்டில் உறுதியாக இருந்ததாலும், பெரும் முதலீடு கொண்ட படம் என்பதாலும் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் 'மாஸ்டர்' வெளியாகவுள்ளது.
திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எனப் பலரும் மாஸ்டர் குழுவின் முடிவைப் பாராட்டிவரும் வேளையில் இயக்குநர் மிஷ்கினும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் மிஷ்கின் கூறியிருப்பதாவது:
"கதைகள், திரைப்படங்கள் இல்லாமல் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். மீண்டும் குடும்பத்தோடு திரையரங்குகளுக்குச் செல்வோம். ஜனவரி 13 அன்று 'மாஸ்டர்' திரைப்படத்தைத் திரையரங்கில் பார்ப்பதை நான் தனிப்பட்ட முறையில் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்.
திரைப்பட ரசிகர்கள் அனைவரும் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்து, திரைத்துறை தழைக்க உதவி செய்ய வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.