

வெற்றிமாறனுடன் பேசும்போது கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். அவ்வளவு அமைதியாகப் பேசுகிறார். தொலைபேசியின் மறுமுனையில் இருக்கும் அவரும் நீண்டநேரம் காத்திருந்து நாம் பேசுவதை பொறுமையாகக் கேட்கிறார். சற்றே சிரித்தபடியே நமது கேள்விக்கான பதில்களை முன்வைக்கிறார்.
வரையறுக்கப்பட்ட பதில்களை அவர் வழங்குவதில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துப் பேசுகிறார். உதாரணமாக, வெனீஸ் உலக திரைப்படவிழாவில் அவரது திரைப்படமான 'விசாரணை' பங்கேற்றது குறித்த அவரது அனுபவம் குறித்து கேட்கும்போதும், இத்தாலியில் ஆம்னெஸ்டி சார்பாக மனித உரிமைக்கான உலக திரைவிழாவில் பரிசு வென்றதையும் குறித்து கேட்பினும் சரி, அங்கு அவரது படைப்புக்கு கிடைத்த பாராட்டைப் பற்றி மட்டும்தான் உங்களிடம் பேசுவார். அதில்கூட எந்தவித ஆர்ப்பாட்டமோ, அதிகப்படியான வளவள பதிலோ இல்லை.
உணர்ச்சிவசப்படும் மனிதராக வெற்றிமாறனைப் பார்க்கமுடியாது. இதுதான் அவரது திரைப்பட உருவாக்கத்திலும் பொருந்தியுள்ளது என அவரே கூறுகிறார். ''என்னை ஒரு ஆய்வாளனாகவே நான் பார்க்கிறேன். ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது நான் புதிய அம்சங்களைக் கற்றுக்கொள்ளவே விரும்புகிறேன். உதாரணமாக 'ஆடுகளம்' 2011-ல் தேசிய விருது பெற்ற படம், இப்படத்துக்காக மதுரையில் உள்ள மக்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. மதுரை வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளவும் வேண்டியிருந்தது. இதற்காக சுமார் மூன்று ஆண்டுகள் நான் மதுரைக்கே குடிபெயர்ந்துவிட்டேன்.
இதேபோலத்தான் எனது முதல்படமான 'பொல்லாதவன்' பைக் திருட்டுக் கொள்ளையர்களின் மறைவான உலகத்தைச் சுற்றிப் பின்னப்பட்டிருந்தது. ''ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு கதையைக் கொண்டிருக்கிறது. அத்தகைய சூழ்நிலையை ஒரு எழுத்தாளர் எப்படிப் பார்த்து எழுதியிருக்கிறார் என்பதையும், அந்த யதார்த்தத்தை நீங்கள் எப்படிஉணர்ந்துகொண்டீர்கள் என்பதையும் வைத்தே ஒரு நல்ல வேலையைத் தீர்மானிக்கிறது. ஒரு திரைப்படம் ரசிகர்களைப் போலவே என்னையும் வளப்படுத்தும். என்னை ஒரு மனிதனாக வளரவும் அது வழிசெய்கிறது.
பொழுதுபோக்கு என்ற பெயரில் ஏதோ ஒரு படத்தை வழங்க நான் தயாரில்லை. பொழுதுபோக்கு என்பதை என்னால் வரையறுக்கமுடியவில்லை. ஆனால் நான் சித்தரிக்கும் உலகத்தில் உள்ள என்னுடைய கதாபாத்திரங்களை என் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். அவ்வகையில் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதிலிருந்தே பொழுதுபோக்கு உருவாக முடியும். பார்வையாளர்கள் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஆழ்ந்த உணர்ச்சிபூர்வமான ஒரு அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்'' என்கிறார் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் படங்கள் மனித மனத்தின் கருப்புப் பக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. ''நிழலான வாழ்வின் கறுப்புப் பக்கங்களை நான் கண்டுபிடிக்கிறேன்.'' என்கிறார் அவர்.
வெற்றிமாறன் அடித்தட்டு மக்கள் மற்றும் தங்கள் பிரச்சனைகளை பேசமுடியாதவர்களின் கதைகளைத் திரட்டி, ஒரே அலைவரிசை நண்பர்களையே குழுவாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
''எங்கள் சிந்தனைகளை நாங்கள் போதிப்பதில்லை. ஆனால் நல்லது கெட்டதுகளைப் பற்றி நாங்கள் சொல்வதின் மூலம் இந்த சமூகத்தில் பாதிப்பை நிகழ்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். நிச்சயமாக மக்களிடம் மாற்றம் உண்டு. சினிமா என்ற ஊடகத்தை எப்படி ஒரு இயக்குநர் கையாளுகிறார் என்பதை சார்ந்தது அது'' என்று உறுதியாகக் கூறுகிறார்.
இயக்குநர் வெற்றிமாறனின் நண்பர்களுள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது இயக்குநரைப்பற்றி இன்னும் விரிவாகப் பேசினார்:
''வெற்றிமாறன் கோவையைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர் எம்.சந்திரகுமார் என்பவர் 'லாக்கப்' என்று ஒரு புத்தகம் எழுதியதைக் கேள்விப்பட்டார். ஆட்டோ டிரைவர் சந்திரகுமார் ஆந்திராவில் ஒரு கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் நியாயமற்ற முறையில் கைதுசெய்யப்பட்டு மற்றவர்களோடு இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் காவலர்களின் கொடுமையை அவர் அனுபவித்துள்ளார். தனது இந்த அனுபவத்தையே சந்திரகுமார் 'லாக்கப்' என்ற நாவலாக எழுதினார்.
நாவலின் கதையை நேர்மையாகவும் உண்மையாகவும் 'விசாரணை' திரைப்படத்தில் வெற்றிமாறன் பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைக் கதை. ஒரு தோல்வியடைந்த அமைப்பை அவன் எப்படி மாற்ற முயல்கிறான் என்பதையும் கூறுகிறது. இது சாதாரண ஒரு சந்திரன் பற்றியது மட்டுமல்ல, முகமற்ற எண்ணற்ற மக்களைப் பற்றியும் பேசுகிறது. அவரது வேதனைகளும், உணர்ச்சிமயமான உண்மைகளும் மிக்க அனுபவங்களால் நானும் ஈர்க்கப்பட்டேன்.
அவர் திரைக்கதையை எழுதத் துவங்கிவிட்டால், வெற்றிமாறன் ஒவ்வொரு உணர்விற்குள்ளும் இருக்கும் மனஉலகின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறார். நீங்கள் திரைக்கதைக்குள் நுழைந்துவிட்டால் உலகமே மறந்துவிடும். உங்கள் நண்பர்களுடன் ஒரு சண்டையின் நடுவில் நீங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கப்புறம், ''இந்த திரைக்காட்சியை எப்படி கொண்டுவரப்போகிறோம் என்றுதான் நீங்கள் யோசிப்பீர்கள், திரைக்கதை வேலைக்கு எதிரே உங்கள் சொந்த வாழ்க்கை அப்பால் சென்றுவிடும். இதெல்லாம் ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்கும்போதும் ஒரு படைப்பாளியின் வாழ்க்கையை உள்வாங்கும்போதும் நடக்கக்கூடியது.
திரைக்கதையின் வலிமை குறித்து வெற்றிமாறனுக்கு நம்பிக்கை உண்டு. அகிரா குரோசேவா அவருக்கு மிகவும் பிடித்த இயக்குநர். காரணம் அவர் உலகின் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் என்பதுதான். மெக்ஸிகோ வாழ்வியலோடு நெருக்கமான நாய்ச்சண்டையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'அமரேஸ் பெரோஸ்' திரைப்படத்தை இயக்கிய அலெஜாண்ட்ரோ கான்சலெஸ்ஸையும் அவருக்கு மிகவும் பிடிக்கும். 'ஆடுகளம்' இயக்குவதற்கு அமரேஸ் பெரோஸ் திரைப்படம் எங்கள் இயக்குநருக்கு உந்துதலாயிருந்தது'' என்று இயக்குநர் வெற்றிமாறனைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார் அந்த நண்பர்.
இனி, திரைப்பட உருவாக்கம் குறித்து வெற்றிமாறன் பேசியதன் தொடர்ச்சியைப் பார்ப்போம். ஒரு தேசிய விருது பெற்ற இயக்குநர் என்ற வகையில் கலையைப் பற்றிய அவரது பார்வை மிகவும் வித்தியாசமாக இருந்தது.
''கலைக்கு அப்பாலும் செல்லக்கூடியது சினிமா. மக்களை எப்படி செல்லக்கூடாது என்ற வகையிலும் அவர்களை யோசிக்கவைக்கக்கூடியது. ஆனால், தயவு செய்து வணிக இயக்குநராகவோ அல்லது உயர் சிந்தனைமிக்க இயக்குநராகவோ என்னை ஏதோ ஒரு பிரிவுக்குள் அடக்கவேண்டாம். அவ்வகையாக என் மீது நீங்கள் முத்திரை குத்துவதை நான் விரும்பவில்லை.
என்னுடைய படங்கள் மெயின்ஸ்ட்ரீம் எனப்படும் பொதுவாக உள்ள ரசிகர்களை குறிவைத்தே எடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில் நான் அவர்களை ஏமாற்றவும் விரும்பவில்லை. அவர்களின் உணர்வுகளை கூர்மையாக வைத்திருக்க விரும்புகிறேன். உண்மையான அனுபவங்களைக் கவனித்து அதையே அவர்களுக்காக நான் படமாக்குகிறேன்.
பெரும்பாலும் நமது படங்கள் எல்லாம் இவற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிகளைக் கொண்டிருக்கின்றன. கலை மற்றும் கலைஞன் போன்ற வார்த்தைகளோடும் எனக்குப் பிரச்சினைகள் உள்ளன. என்னைப் போன்ற இயக்குநர்களை கலைஞன் என அழைக்க வேண்டாம். ஏனெனில் கலை கலைக்காக என்ற கொள்கையில் ஒரு இயக்குநர் படம் எடுப்பதில்லை. ஒரு திரைப்படம் என்பது ஒரு குழுவினரின் ஒட்டுமொத்தப் பணி. இதில் இயக்குநர் என்பவர் ஒரு கேப்டன்தான். ஆனால், இதில் ஒருவர் தனது பங்களிப்பில் குறைவைத்தாலும் படம் உருவாக்குதலே பாதிப்படையும்.
காட்சிகளைப் படமாக்குவதற்கு ஒளிப்பதிவாளர், பணம் செலவழிக்க தயாரிப்பாளர் போன்றவர்கள் தேவை. படம் உருவாக்க செலவழித்த பணத்தை திரும்ப வேண்டுமென்றுதான் நாம் விரும்புகிறோம். சினிமா என்பது முதலில் அறிவியல் பின்னர், வணிகம். அதன்பின்னர்தான் அது கலை'' என்று தெளிவாக சொல்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
தமிழில்: பால்நிலவன்