

சிலசமயங்களில் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் விடுவதில்லை என்று 'பசங்க 2' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் நடித்திருக்கும் படம் 'பசங்க 2'. அரொல் கொரேலி இசையமைக்க பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சூர்யா வழங்க இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இணைந்து வெளியிட இருக்கிறது.
'பசங்க 2' படத்தின் இசை வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது. 'பசங்க' படக்குழுவினர் இசையை வெளியிட 'பசங்க 2' குழுவினர் பெற்றுக் கொண்டார்கள். சூர்யா, ஜோதிகா, கார்த்தி, சிவகுமார், இயக்குநர்கள் ராம், பொன்.ராம், சமுத்திரக்கனி, பிரபுசாலமன் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் பங்கேற்றார்கள்.
நடிகர் சூர்யா பேசும்போது," இயக்குநர் பாண்டிராஜ் இக்கதையோடு என்னிடம் வந்தது எனக்கு கிடைத்த ஆசி தான். 5 வருடங்களாக நிறைய படித்து பண்ணிய விஷயங்களை எனது 2டி நிறுவனத்துக்காக கொண்டு வந்த பாண்டிராஜ் சாருக்கு பெரிய மனசு. இந்நிகழ்வுக்கு காரணம் விஜய் மில்டன் என்று தெரிவித்தார். இச்சயமத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த 'பசங்க 2' குழுவுக்கும், இக்கதையில் அழகாக நடித்துக் கொடுத்திருக்கும் குழந்தைகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
பாண்டிராஜிடம் இன்னொரு முறை கதை சொல்றீங்களா என்று கேட்கும் போது, கண்டிப்பாக சார் என்று கூறினார். என்னுடைய ஆசிரியர்கள், அகரம் குழுவில் இருப்பவர்கள் என எல்லோருக்கும் கூறி அவர்கள் கூறியதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டார். அவருடைய சக்தி அவருடைய பேனா தான். அதை படம் முழுவதும் பார்க்கலாம்.
'பசங்க' படத்தில் கிராமப்புறத்தில் இருக்கும் குழந்தைகள், பள்ளிகளில் இருக்கும் சிரமங்களைப் பதிவு செய்தார். இப்படத்தில் நகர்ப்புறத்திலும் அதே விஷயங்கள் இருக்கிறது. அதை கவனிக்க தவறி விடுகிறோம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் சில சமயங்களில் விடுவதில்லை. அதை மறுபடியும் இப்படம் மூலமாக வலியுறுத்தி இருக்கிறோம். அனைத்தையுமே ஒரு படிப்பின் மூலமாக சமமாக்கி விட முடியாது.
ஒவ்வொரு குழந்தையுமே ஸ்பெஷல் தான், அவர்களுக்கு என்று தனித்தன்மை இருக்கிறது. படிப்பை மட்டும் நம்பாமல், அவருடைய திறமைகளையும் நம்பலாமே என்று சொல்கிற படமாக 'பசங்க 2' இருக்கும்.
எப்படி இவ்வளவு குழந்தைகளை வைத்து படப்பிடிப்பு பண்ணுகிறார் பாண்டிராஜ் சார் என்று கேட்பார்கள். அவருக்கே இருக்கும் கேலி, கிண்டல், குசும்பு உடன் படப்பிடிப்பு நடத்துவார். முதலில் 6 நாட்கள் என்னிடம் தேதிகள் கேட்டார், அதை அப்படியே 14 நாட்களாகிவிட்டது. படத்திற்குள் வந்தவுடன் என்ன சார் இதெல்லாம் எதிர்பார்க்கிறீர்களே என்று ஆச்சர்யமாக இருந்தது. படப்பிடிப்பின் போது நான் நாகேஷ் சார், ராபின் வில்லியம்ஸ், ஜிம் கேரி மாதிரி இல்லை என்று தோன்றியது. அவ்வளவு விஷயங்கள் என்னிடம் எதிர்பார்த்தார். என்னிடம் அவர் எதிர்பார்த்த விஷயங்கள் எனக்கே சவாலாக இருந்தது.
நிச்சயமாக 'பசங்க 2' திரைப்படம் குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்குமே ஒரு முக்கியமான படமாக இருக்கும். நவம்பர் மாத இறுதியில் இப்படத்தை வெளியிட தீர்மானித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், "'பசங்க' படத்துக்குப் பிறகு நிறைய பணம் பண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது மீண்டும் 'பசங்க 2' மூலம் மீண்டும் படம் பண்ணியிருக்கிறேன். அதெல்லாம் ஆவின் பால் என்றால் இது தாய்பால். இப்படம் சூர்யா சார் தயாரித்திருப்பதில் மிகவும் சந்தோஷம். 100 கோடி வியாபாரம் உள்ள நடிகரிடம் போய் யாருமே இப்படத்தின் வேடம் நீங்கள் பண்ணுங்கள் என்று கேட்க மாட்டார்கள். ஆனால், நான் தைரியமாக போய் கேட்டேன். அவருக்கு கண்டிப்பாக பண்ணுகிறேன் என்று கூறியது மிகவும் சந்தோஷம்." என்று தெரிவித்தார்.