தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு
Updated on
1 min read

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேற்று இரவு திடீரென்று சந்தித்துப் பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தணிக்கைப் பணிகள் முடிந்ததால், ஜனவரி 13-ம் தேதி வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, தமிழகத்தில் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. 'மாஸ்டர்' படமோ பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்பதால், திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதியது படக்குழு.

மேலும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் திரையுலகினர் வேண்டுகோள் வைத்தால் 100% இருக்கைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு (டிசம்பர் 27) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி - விஜய் சந்திப்பு நடைபெற்றது.

க்ரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது 'மாஸ்டர்' படத்துக்காக 100% இருக்கைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் விஜய். அதற்குப் பரிசீலித்து முடிவு செய்வதாக உறுதி அளித்துள்ளார் தமிழக முதல்வர்.

மேலும், சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழக அரசுத் தரப்பிலிருந்து விஜய் சந்தித்தது ஏன் என்பதற்கான விளக்கம் இதுவரை வெளியிடப்படவில்லை.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக முதல்வர் - விஜய் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in