பாட்ஷா பாணியில் உருவாகும் அஜித்தின் வேதாளம்

பாட்ஷா பாணியில் உருவாகும் அஜித்தின் வேதாளம்
Updated on
1 min read

'பாட்ஷா' படத்தின் பாணியில் உருவாகி வருகிறது சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படமான 'வேதாளம்'.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் சிவா. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே படத்தின் முதல் பாதி பணிகள் அனைத்துமே முடிக்கப்பட்டு விட்டன. தற்போது இரண்டாம் பாதி பணிகளை விரைவில் முடிக்கவிருக்கிறார்கள். சமீபத்தில் தான் இப்படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. படத்தின் இசை அனிருத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் கதை அமானுஷ்யம் சம்பந்தப்பட்டது, அஜித் பேயாக நடித்திருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இப்படம் ஒரு பேய் படமே அல்ல. முழுக்க கமர்ஷியல் வகை சார்ந்தது தான் இந்தப் படம்.

இப்படத்தின் கதைச் சாயல் 'பாட்ஷா' படத்தைப் போலவே அமைந்திருக்கிறது. கொல்கத்தாவில் கணேஷ் என்ற பாத்திரத்தில் தனது தங்கை தமிழ் (லட்சுமி மேனன்) உடன் வாழ்ந்து வருகிறார் அஜித். அங்கு வரும் வில்லன்கள் 'வேதாளம்' எப்படி இங்கே என அதிர்ச்சியடைகிறார்கள். அதற்கு பிறகு ப்ளாஷ்பேக்கில் கதை விரியும்போது, சென்னையில் வேதாளம் என்ற தாதாவாக இருக்கிறார் அஜித். அங்கு எதிரிகளை எல்லாம் அழித்துவிட்டு, இந்த வாழ்க்கை வேண்டாம் என்று தன்னை மறைத்து கொல்கத்தாவில் வாழ்ந்து வந்திருப்பது தெரியவருகிறது. இறுதியில் அஜித் என்ன செய்தார் என்பது தான் கதையாம்.

'பாட்ஷா' படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர், 'வேதாளம்' படத்தில் அஜித் கால் டாக்ஸி டிரைவர். அந்த கால் டாக்ஸி நிறுவனத்தின் முதலாளியாக சூரி நடித்திருக்கிறார். வக்கீலாக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன் அவருடைய நண்பர்களாக லொள்ளு சபா சாமிநாதன், பால சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அஜித்தின் அப்பாவாக தம்பி ராமையா, நண்பராக அப்புக்குட்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in