Published : 24 Dec 2020 15:59 pm

Updated : 24 Dec 2020 20:25 pm

 

Published : 24 Dec 2020 03:59 PM
Last Updated : 24 Dec 2020 08:25 PM

கதாநாயகன் விஜய் சேதுபதியின் பத்தாண்டுகள்: தனித்துவப் பாதையில் உயரங்களைத் தொடும் கலைஞன் 

10-years-of-vijay-sethupathi

சென்னை

வெகுஜன சினிமாவில் கதாநாயக நடிகராக உயர்ந்து நட்சத்திர அந்தஸ்தையும் பெற்ற நடிகர்கள் பலர் அதற்கு முன்பு பல படிகளைக் கடந்து வந்திருப்பார்கள். தொலைக்காட்சி நடிகர், துணை நடிகர், வில்லன் நடிகர், இரண்டாம் நாயகன், நாயகன் என்று இந்தப் படிநிலயில் உச்ச நிலையான நாயக அந்தஸ்தைப் பெற்றவர்கள் அதன் பிறகு பின்னோக்கிச் செல்வதில்லை. அதாவது மற்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டார்கள். நடித்தால் தனக்கான நாயக சந்தை மதிப்பு குறைந்திடும் என்று அஞ்சுவார்கள்.

அது மட்டுமல்ல நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றவுடன் கதைக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதை விடுத்து தனது இமேஜுக்கு ஏற்ற, ரசிகர்கள் தன்னிடம் எதிர்பார்க்கும் விஷயங்களை உள்ளடக்கிய கதைகளில் மட்டுமே நடிப்பார்கள். தமிழ் வெகுஜன சினிமா சூழலில் இது தவிர்க்க முடியாதது. இதற்கு நாயக நடிகர்களை மட்டும் குறை சொல்லிப் பிரயோஜனமில்லை. ஆனால் இதைப் பொய்யாக்கிய ஒரு நடிகர் விஜய் சேதுபதி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ வெளியாகி இன்றோடு பத்தாண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நாளில் கதாநாயகனாக உயர்ந்த விஜய் சேதுபதியின் அதற்குப் பிந்தைய முன்னுதாரணம் இல்லாத பயணத்தை அலசுவது பொருத்தமானதாக இருக்கும்.


விருதுகளால் கிட்டிய கவனம்

2010 டிசம்பர் 24 அன்று வெளியான ‘தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படத்தை பாலுமகேந்திராவின் சீடர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கியிருந்தார். வெளியானபோது இந்தப் படம் பரவலான கவனத்தை ஈர்க்கவில்லை. அதற்கு முன்பு ‘லீ’, ‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக் குழு’ உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் வந்து சென்ற விஜய் சேதுபதி தனித்து அடையாளம் காணும் அளவு கவனிக்கப்படாததுபோலவே அவர் நாயகனாக நடித்த இந்தப் படத்திலும் கவனிக்கப்பட்டிருக்க மாட்டார். ஆனால், அந்த ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது ’தென்மெற்குப் பருவக்காற்று’ படமும் அதில் பங்கேற்ற கலைஞர்களும்தான் பேசுபொருளாகினர்.

சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த நடிகை (சரண்யா), சிறந்த பாடலாசிரியர் (வைரமுத்து) ஆகிய மூன்று தேசிய விருதுகளை அந்தப் படம் வென்றது. படம் வெளியாகிக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நல்ல திரைப்படங்களை நாடும் ஆர்வலர்கள் பலர் அந்தப் படத்தைப் பார்க்கத் தவறிவிட்டோமே என்று வருந்தினர். விமர்சனங்களைத் தேடி எடுத்துப் படித்தனர். படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அது தாய்ப்பாசத்தை முன்னிறுத்திய தரமான கிராமியப் படைப்பு என்பதை உணர்ந்தனர். அதற்குத் தகுதியான வணிக வெற்றி என்னும் அங்கீகாரத்தைத் தரத் தவறியமை குறித்து சிலர் குற்ற உணர்வுகொண்டனர்.

உண்மையில் ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் அனுபவத்தை வைத்துத்தான் நட்சத்திர மதிப்பு இல்லாத முற்றிலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட சிறு முதலீட்டுப் படங்களை முதலில் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்று அதன் பிறகு வெகுஜனத் திரையரங்குகளில் வெளியிடும் வழக்கம் கோலிவுட்டில் தொடங்கியது. ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘குற்றம் கடிதல்’ எனப் பல படங்கள் இந்தப் பாதையில் ரசிகர்களை வந்தடைந்தன.

முதல் அடையாளமும் வெற்றிகளின் தொடக்கமும்

’தென்மேற்குப் பருவக்காற்று’ திரைப்படத்தின் நாயகன் என்பது விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. 2012இல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கய முதல் படமான ‘பீட்சா’ வெளியானது. இந்தப் படமே நாயகனாக விஜய் சேதுபதியின் முதல் வணிக வெற்றிப் படம். விமர்சன ரீதியாகவும் பரவலான பாராட்டுகளைப் பெற்ற இந்தப் படம் குறும்படங்களில் சாதித்த இளைஞர்கள் திரைப்படத் துறையை நோக்கி நகர்வதற்கான உத்வேகத்தை அளித்தது.

அதிலிருந்து தொடங்கி இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கும் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு நீடிக்கப் போகும் விஜய் சேதுபதியின் வெற்றிப் பயணம் அனைவரும் அறிந்த கதை. வணிக வெற்றி, விமர்சன ரீதியான வெற்றி, தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படம் என்ற அடையாளம். இவை மூன்றும் கிடைத்த படங்கள், இவற்றில் ஏதேனும் ஒன்று மட்டும் கிடைத்த படங்கள், இவற்றில் எதுவுமே கிடைக்காத படங்கள் என அனைத்திலும் இந்தப் பத்தாண்டுகளில் விஜய் சேதுபதி நடித்துவிட்டார். இருந்தாலும் இப்படி ரிஸ்க்குகள் நிறைந்ததென்றாலும் தனக்கென்று தனிப்பாதை அமைத்து அதன் மூலமாகத் தனித்த அடையாளம் பெற்று இன்று தமிழ்ச் சமூகம் கொண்டாடும் தவிர்க்க முடியாத திரைக் கலைஞனாகத் திகழ்கிறார்.

தனிப் பண்புகளால் எட்டிய உயரம்

விஜய் சேதுபதியின் நடிப்பு, திரைப்படத் தேர்வு ஆகியவை குறித்து பலருக்கு விமர்சனங்களும் இருக்கின்றன. எந்தக் கலைஞனுக்குத்தான் இருக்காது? ஒரு நடிகராக விஜய் சேதுபதியும் விமர்சனத்துக்குரிய காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனாலும், திறமை மட்டுமல்லாமல் ஒரு கதாநாயக நடிகராக அவரிடம் இருக்கும் தனித்துவமான பண்புகளால் அந்த விமர்சனங்களைக் கடந்து கொண்டாடப்பட வேண்டிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஆளுமையாக இருக்கிறார்.

ஒரு நடிகராக விஜய் சேதுபதியின் தனித்துவப் பண்புகளின் பட்டியல் நீளமானது. இமேஜ் வளையத்துக்குள் சிக்கிக்கொள்வதை அறவே தவிர்த்திருக்கிறார். இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பின் அவர் முதன்மை நாயகனாக நடித்த ‘சூது கவ்வும்’ படத்தில் நீண்ட முடியும் நரைத்த தாடியுமாக 40 வயதைக் கடந்தவராக நடித்தார். அதுவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தில் 60 வயதை நெருங்கும் முதியவராக நடித்தார். ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ படத்தில் இரண்டாம் நாயகனாக நடித்தார். ’விக்ரம் வேதா’ படத்தில் நிஜத்தில் தன்னைவிட வயதில் மூத்தவரான மாதவனைவிட முதிய தோற்றம் கொண்டவராக நடித்தார். ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்தார். நாயகியை மையமாகக் கொண்ட ‘இமைக்கா நொடிகள்’, ’க.பெ.ரணசிங்கம்’ போன்ற படங்களில் சற்று கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த துணைக் கதாபாத்திரமாக நடித்தார்.

தன்னுடைய 25ஆம் படமான ‘சீதக்காதி’யில் ஒரு முதியவராக அதுவும் சுமார் முக்கால் மணி நேரம் மட்டுமே வரக்கூடிய கெளரவத் தோற்றத்தில் நடித்திருந்தார், ’பேட்ட’, ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்தார். இப்படி வலுவான கதையம்சமுள்ள, வித்தியாசமான ஆஃப்-பீட் படங்களிலும் மற்றவர்கள் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களிலும் மட்டுமே நடிப்பவர் என்கிற வளையத்துக்குள்ளும் அவர் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

’நானும் ரெளடிதான்’, ‘றெக்க’, ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ’கருப்பன்’, ‘சங்கத்தமிழன்’ போன்ற பக்கா கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார். வெவ்வேறு கதைகள், கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக இருக்கிறார். ஒரு கதையோ, கதாபாத்திரமோ தன்னை ஈர்த்துவிட்டால் அதில் நடித்துவிடுகிறார். இமேஜ் உள்ளிட்ட வேறெந்த புறக் காரணிகளும் அதற்குத் தடையாக இருக்க அவர் அனுமதிப்பதில்லை.

நிலைமாறாப் பண்புகள்

நாயகனாக உயர்வதற்கு முன்பு இருந்ததைப் போலவே வெற்றிகரமான நாயக நடிகராக வலம்வரும்போதும் அனைத்து விதங்களிலும் இருக்கிறார். துணைக் கதாபாத்திரங்கள், போட்டி நடிகர்கள் படங்களில் கெளரவத் தோற்றம் அல்லது வில்லனாக நடிப்பது, மாற்றுமொழிப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுவது, பொதுமக்களிடம் நெருக்கமாக இருப்பது, பொது விஷயங்களில் கருத்துகளைப் பகிர்வது என்று நட்சத்திர நடிகர்களிடம் எளிதாகக் காணக்கிடைக்காத பண்புகள் விஜய் சேதுபதியை இன்றைய உயரத்தில் அமர்த்தியிருக்கின்றன.

இந்தப் பண்புகள் அப்படியே தொடருமா என்று சந்தேகிப்பதற்கான சாத்தியங்களையே விஜய் சேதுபதி அளிப்பதில்லை. அவர் படங்கள் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் நம்மை அச்சர்யப்படுத்துபவையாகவும் அந்தப் படங்களை அதில் அவருடைய பங்களிப்பை ஆவலுடன் எதிர்நோக்க வைப்பவையாகவும் இருக்கின்றன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது அடுத்த பத்தாண்டுகளில் திரைத் துறையிலும் ரசிகர்களின் மனங்களிலும் இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடித்திருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

தவறவிடாதீர்!


விஜய் சேதுபதிநாயகன் விஜய் சேதுபதிவிஜய் சேதுபதியின் 10 ஆண்டுகள்தென்மேற்கு பருவக்காற்றுசீனு ராமசாமிதென்மேற்கு பருவக்காற்று வெளியான நாள்விஜய் சேதுபதியின் வளர்ச்சிவிஜய் சேதுபதியின் படங்கள்One minute newsVijay sethupathiVijay sethupathi moviesHero vijay sethupathi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x