

'மஹா' உருவாகும் விதம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன், இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. தற்போது கோடை விடுமுறை வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 'மஹா' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது குறித்து ஹன்சிகா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னுடைய 50வது படமான 'மஹா' உடனான தனித்துவமான பயணம் இது. இப்படத்தில் ஆத்மார்த்தமாக வேலை செய்த என்னுடைய சக நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முன் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படம் உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது."
இவ்வாறு ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
'மஹா' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.